கல்முனையில் - தனியார் பேருந்துகளை வீதிக்கு குறுக்காக நிறுத்தி போராட்டம்

அம்பாறை மாவட்டம் கல்முனையில் தனியார் பேருந்துகளை வீதிக்கு குறுக்காக நிறுத்தி போராட்டம் நடத்தப்பட்டதுடன், இ.போ.ச ஊழியர்களும் மற்றுமொரு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்தும், சீரான எரிபொருள் விநியோகம் நடைபெறாமல் உள்ளதை காரணமாக கொண்டும் நாட்டின் பல பகுதிகளில் தற்போது போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது எரிபொருளை தடையின்றி வழங்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளினால் எரிபொருள் கோரி நேற்று இலங்கை போக்குவரத்து சபை கல்முனை சாலை முன்னிலையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக கல்முனை வீதி போக்குவரத்து தடைப்பட்டது.

பேருந்துகளை வீதிக்கு குறுக்காக நிறுத்தி போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் காவல்துறையினர் மற்றும் கடற்படையினரின் சமரச பேச்சுவார்த்தைக்கும் இனங்காமல் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை ஒத்ததாக இலங்கை போக்குவரத்து சபை சாலை ஊழியர்கள் தமது தனியான போக்குவரத்தை கருத்தில் கொண்டு எரிபொருளை பெற்றுத்தருமாறு கோரி சாலை வளவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள், தங்களின் நிலைப்பாடு தொடர்பில் அரசாங்க அதிபர், பாதுகாப்பு படை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை காத்திரமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றனர்.

மேலும் பணிகளை முடித்துவிட்டு இரவிலும், அதிகாலையிலும் வீடுதிரும்பும் நாங்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவிப்பதாக தெரிவித்ததுடன், அத்தியாவசிய சேவை வழங்கும் எங்களின் பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி தீர்வை பெற்றுத்தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
புதியது பழையவை