இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு,கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று(29) அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
கிழக்கிலங்கையின் வரலாற்று புகழ்மிக்க ஆலயங்களுள் ஒன்றாகவும் மூர்த்தி, தலம், தீர்த்தம் என ஒருங்கே அமையப்பெற்ற மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம் கிழக்கிலங்கையில் சித்திரத்தேர் இழுக்கும் முதல்ஆலயம் என்ற பெருமையினையும் கொண்டது.
இன்று (29-08-2022)அதிகாலை விசேட யாக பூசை இடம்பெற்றதுடன் மூல மூர்த்திக்கு கும்ப அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகோற்சவ கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு தம்பத்துக்கு அருகில் விசேட பூசை இடம்பெற்றது.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது.
தொடர்ந்து தம்பத்துக்கு அபிசேகம் செய்யப்பட்டு பிரதம குருவினால் ஆசிர்வாதம் வழங்கப்பட்டதுடன் தொடர்ந்து சுவாமி உள் வீதியுலா வந்து வசந்த மண்டபத்தில் விசேட பூசைகள் இடம்பெற்றன பல இடங்களிலும் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு பெருமானின் அருள்பெற்று சென்றனர்.