போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு எதிராக பொருளாதார தடை - ஐ.நா ஆணையாளர் பரிந்துரை

இலங்கையை திவாலாக்கியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறும், சர்வதேச சட்டத்தின்படி செயற்படுமாறும் உறுப்பு நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டங்களை ஒடுக்குவதையும் நிறுத்த வேண்டும்

மனித உரிமைகள் பேரவையின் 52ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் 12ஆம் திகதி முதல் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்பதற்காக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் ஏற்கனவே ஜெனிவா சென்றுள்ளனர்.

நாகரீக உலகம் ஏற்றுக்கொள்ளாத கடுமையான சட்டங்களைப் பயன்படுத்துவதையும், அமைதியான போராட்டங்களை ஒடுக்குவதையும் நிறுத்துமாறு மனித உரிமைகள் ஆணையம் இலங்கை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

அத்துடன், நம்பகமான உண்மையைக் கண்டறியும் பொறிமுறையொன்றை உருவாக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் மனித உரிமைகள் ஆணைக்குழு, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் முன்னேற்றமடையாமல் இழுத்தடித்து வருவது குறித்தும் கவலை வெளியிட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை மீளப் பெறவும், பாதுகாப்புப் படைகளை சீர்திருத்தவும் அவர் பரிந்துரை செய்துள்ளார்.

இலங்கை ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது எனவும் போர்க்குற்றம் சுமத்தப்பட்ட இராணுவ வீரர்களின் விடுதலையை ரத்து செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

11 இளைஞர்கள் காணாமல் போனமை தொடர்பிலான அறிக்கையில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணகொடவின் பெயரையும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சர்வதேச ஆதரவுடன் விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
புதியது பழையவை