மத்தியமாகாணத்தின் பண்டாரவளை பிந்துனுவேவ பகுதியில் இத்தடுப்பு முகாம் அமைந்துள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் பலர் இங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 18க்கு வயதிற்கு குறைந்த சிறுவர்கள் சிலரும் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
2000 ஒக்டோபர் 25ம் திகதி காலையில் தடுப்பு முகாமிற்கு வெளியே அண்ணளவாக 3,000 வரையிலான சிங்களவர்கள் வாள்கள், கத்திகள் மற்றும் ஆயுதங்களுடன் கூடியிருந்தனர். திடிரென முகாமிற்குள் உள்நுழைந்த அவர்கள் அங்கிருந்த தமிழ் அரசியற்கைதிகள் மீது வாள்கள், கத்திகள் மற்றும் இரும்பு பைப்களால் தாக்குதல் நடாத்த தொடங்கினர். நான்கு அரசியற்கைதிகள் உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்டனர். ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டது. இச்சம்பவங்களை அங்கிருந்த பொலிஸார் தடுக்க முற்படாது வேடிக்கை பார்த்தவாறு இருந்தனர்.
சில அரசியல்கைதிகள் உயிர்தப்பிப்பதற்காக ஓடியபோது அவர்கள் மீது பொலிஸாரால் துப்பாக்கிச்சூடும் நடாத்தப்பட்டது. அதில் ஒருவர் கொல்லப்பட்டார்.
இச்சம்பவத்தில் மொத்தமாக 27 அரசியற்கைதிகள் கொல்லப்பட்டனர். 14 பேர் காயமடைந்தனர்.
கொல்லப்பட்டவர்களில் சிலர் 18க்கு வயதிற்கு குறைந்த சிறுவர்களாவார்கள். அவர்களில் ஒருவருக்கு வயது 14. காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மூவர் 18 வயதிற்கு குறைந்தவர்களாவார்கள். அவர்களில் இருவருக்கு 11, 12 வயதாகும்.
இச்சம்பவம் தொடர்பாக சிறை அதிகாரிகள், பொலிஸார் மற்றும் சிங்களக் காடையர்கள் என 41 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது. அவர்களில் இரு பொலிஸார் மற்றும் 03 சிங்களக் காடையர்கள் என ஐவருக்கு 01 யூலை 2003 அன்று நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஏனையவர்கள் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டனர். அதன்பின்னர் அவர்களின் மேன்முறையீட்டுக்கமைய அவர்கள் அனைவரும் நிரபராதிகள் என நீதிமன்றால் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இப்படுகொலைகளை எதிர்த்து மலையகத்தில் பல இடங்களில் அமைதியான முறையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்பட்ட போது, அங்கு வந்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தியதில் 04 மலையக தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டு, பலர் காயமடைந்தனர். அப்பகுதியிலிருந்த தமிழர்களின் கடைகளும் சிங்களக்காடையர்களினால் தீவைத்து எரிக்கப்பட்டது.
அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாக, வன்முறையில் ஈடுபட்டதாக வழக்குத் தொடரப்பட்டது.