கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்திற்கு முன்பாக - ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கிழக்கு மாகாணத்தில் உள்ள கஷ்டப் பிரதேச பாடசாலைகளில், கடந்த ஐந்து வருட காலமாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் தமக்கான இடமாற்றம் இன்னமும் வழங்கப்படவில்லை என தெரிவித்து கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

இதுவரை காலமும் பணிக்கு அமர்த்தப்பட்டு ஐந்தாவது வருடத்தை பூர்த்தி செய்த பின்னர் தமக்கான இடமாற்றத்தினை பெறுவதற்கான அனுமதி கோரப்பட்ட போதிலும் இவ்வருடம் மேலும் இன்னும் ஒரு வருடத்தினை அதாவது ஆறு வருடத்தினை பூர்த்தி செய்த பின்னரே இடமாற்றத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளதன் காரணமாக தாம் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியிருப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஐந்து வருட காலத்திற்கும் மேலாக நாளொன்றுக்கு 80 கிலோமீட்டர் தூரம் வரை பயணித்து தாம் பணிபுரிந்து வருவதாகவும் இதன் காரணமாக தாம் பாரிய மன உளைச்சல்களுக்கு உள்ளாகி இருப்பதாகவும் தெரிவித்த ஆசிரியர்கள், காலை 5 மணிக்கு தாம் பணிக்காக புறப்பட்டாள் மாலை 5 மணி வரை வீடு செல்ல முடியாது இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இடமாற்றத்திற்கான விண்ணப்பம் கோரப்பட்டு அனைவரும் அதனை பூர்த்தி செய்துஅனுப்பிய பின்னராக திடீரென ஆறு வருட பணியினை பூர்த்தி செய்தவர்களுக்கே இடமாற்றம் வழங்கப்படும் என தெரிவிப்பது தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டனர்.

இதன் காரணமாக தமது கோரிக்கைகளை கருத்தில் கொண்டு தமக்கன இடமாற்றத்தினை பெற்று தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
புதியது பழையவை