இலங்கையில் இருந்து மூன்று மாத கைக்குழந்தையுடன் மூன்று குடும்பத்தை சேர்ந்த 10 பேர் அகதிகளாக தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் கடும் விலை ஏற்றம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் அகதிகளாக சென்றடைந்தனர்.
இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜஸ்டின் அவரது மனைவி அனுஷ்யா அவரது மூன்று மாத குழந்தை, மன்னார் மாவட்டத்தை சேர்ந்த ஜெயக்குமார், அவரது மனைவி யோகேஸ்வரி அவரது இரு மகள்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த புஷ்பம் மற்றும் அவரது மகன் பிரபாகரன் உட்பட மூன்று குடும்பத்தை சேர்ந்த 10 பேர் நேற்று இரவு மன்னாரில் இருந்து ஒரு படகில் புறப்பட்டு இன்று சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் நடுதிட்டு பகுதியில் இறங்கியுள்ளனர்.
இது தொடர்பில் தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் காவல்துறையினர், இலங்கைத் தமிழர்களை மீட்டு ராமேஸ்வரம் மரைன் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
தமிழகம் சென்ற இலங்கையர்கள்
ஈழத்திலிருந்து மூன்று மாத குழந்தை உட்பட பலர் தமிழகத்தில் தஞ்சம்!
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை விலை அதிகரித்துள்ளது. அதே போல் டீசல் மற்றும் பெட்ரோல் விலையும் வெகுவாக உயர்ந்துள்ளது.
விலைவாசி ஒரு பக்கம் உயர்ந்தாலும், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால் இலங்கையில் குழந்தைகளை வைத்து வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது மூன்று மாத கைக்குழந்தையுடன் பலத்த மழை மற்றும் சூறைக்காற்றுக்கு மத்தியில் படகில் உயிரை பணயம் வைத்து தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாக இலங்கை தமிழர்கள் தெரிவித்தனர்.
பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பின் 10 பேரையும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி முதல் இன்று வரை இலங்கையில் இருந்து 198 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.