வியட்நாம்மில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கை அகதிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கைக்கு செல்ல முடியாது என கோரி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரு இலங்கை அகதிகள் தற்கொலை செய்ய முயற்சித்திருந்தனர்.
இவ்வாறு தற்கொலை செய்ய முயற்சித்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததை அடுத்து, அவர் அந்த நாட்டின் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
இவ்வாறு சிகிச்சை பெற்று வந்த ஒருவரே, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வியட்னாம் தூதுவராலயம் சார்பாக குடும்பத்தினருக்கு இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
யாழ்ப்பாணம் – சாவக்கச்சேரி பகுதியைச் சேர்ந்த 37 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையான சுந்திரலிங்கம் கிரிதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், குறித்த நபரின் சடலம் தொடர்ந்தும் அந்த நாட்டு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இவருக்கு பிறந்து ஆறு மாதங்களே ஆன பெண் குழந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இவர் பொருளாதார சூழல் காரணமாக புலம் பெயர முயற்சித்ததாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
சடலத்தை மீள வழங்குவதற்கு அந்த நாட்டு அதிகாரிகள் 30 லட்சம் தொகையை கோருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.