மட்டக்களப்பில் பாரம்பரிய கலாசார அம்சங்களுடன் இடம்பெற்ற தைப்பொங்கல் விழா!மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் மாவட்ட சமய சமூக கலாசார ஒன்றியமும் இணைந்து நடாத்திய தைப்பொங்கல் விழா இன்று (26-01-2023)  திகதி வியாழக்கிழமை வெகுவிமர்சையாக இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட செயலக முன்றலில நடைபெற்ற நிகழ்விற்கு ஆன்மீக அதிதியாக கிழக்கு இலங்கை இந்து குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ லோகநாதன் குருக்கள் கலந்துகொண்டு ஆசி வழங்கியதுடன் நிகழ்வினை சிறப்பித்திருந்தார்.

அதிதிகளுக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு வரவேற்பளிக்கப்பட்டு, மாவட்ட அரசாங்க அதிபரினால் நந்திக்கொடி ஏற்றப்பட்டதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் பாரம்பரிய முறைப்படி அரிசி குற்றி பொங்கல் பொங்கியதுடன், பாரம்பரியமான வாழ்கை முறையினை பிரதிபலிக்கின்ற பழமைவாய்ந்த பண்பாட்டு கலைப்பொருட்கள் இதன்போது மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இப்பொங்கல் விழாவின் போது பிரதான பொங்கல் பானைக்கான அரிசியினை மாவட்ட அரசாங்க அதிபர் இட்டதுடன், பொங்கல் பொங்கி மாவட்ட செயலக ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ உத்தம ஜெயதீஸ்வர குருக்களினால் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இத் தைப்பொங்கல் விழாவினை சிறப்பிக்கும் முகமாக விசேட சொற்பொழிவு இடம்பெற்று, பல்வேறு கலை கலாசார நிகழ்வுகள் சிறார்களினால் அரங்கேற்றப்பட்டதுடன் அவர்களுக்கான பரிசில்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.

மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.நவரூபரஞ்ஜினி முகுந்தன், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் திருமதி.இந்திராவதி மேகன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஆர்.காயத்திரி, மாவட்ட செயலக கணக்காளர் எம். வினோத், பிரதேச செயலாளர்களான மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன், மண்முனைபற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி, மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் கணபதிப்பிள்ளை மதிவண்ணன், மாவட்ட செயலக பொறியியலாளர் ரீ.சுமன், மாவட்ட செயலக பிரதித்திட்டமிடல் பணிப்பாளர்களான ஆர்.ஜதீஸ்குமார், ஆ.சுதாகரன், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வீ.ஈஸ்வரன், மாவட்ட ஊடக பொறுப்பதிகாரி வ.ஜீவானந்தன், மட்டக்களப்பு மாவட்ட உதவித் தெரிவத்தாட்சி அலுவலரும், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான தெரிவத்தாட்சி அலுவலருமான எம்.வீ.எம்.சுபியான், கமக்கார அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் அருளானந்தராஜா ரமேஸ், ஆனந்த கிரி அறப்பணி மன்றத்தின் தலைவர் எல்.தீபாகரன், உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் ச.ஜெயராஜா, ஓய்வு நிலை அதிபர் திருமதி.இந்திராணி புஸ்பராஜா, உள்ளிட்ட மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பெருமளவானார் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்திருந்ததுடன், நிகழ்வினை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கி.குணநாயகம் தொகுத்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை