மட்டக்களப்பில் ஆட்கடத்தலில் ஈடுபடும் பிள்ளையானின் சகோதரர் - வெளிவந்த பகிரங்க குற்றச்சாட்டு



மட்டக்களப்பு மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரின் சகோதரர் ஒருவர் சட்ட விரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு ஆட்கடத்தலில் ஈடுபடுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் சகோதரரான சிவனேசதுரை அகிலகுமார் என்பவர் சட்டவிரோதமான ஆட்கடத்தலில் ஈடுபடுவதாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்குத் தெரியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் செல்வது முற்றாக தவிர்க்கப்படல் வேண்டும். இது தற்போது பாரியதொரு பிரச்சனையாகவும் மாறியிருக்கின்றது. சில கிராமங்களில் இளைஞர்களைத் தேடி எடுக்க முடியாத நிலமையும் உள்ளது.

சட்டரீதியான முறையில் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று தமது வாழ்வை முன்னெடுக்கின்ற நிலையில், இன்னும் சிலர் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு பல முகவர்களை நம்பி கோடிக்கணக்கான பணத்தைச் செலவு செய்கின்றார்கள்.

இதனால் பலர் தமது வீடு வளவுகளையும் விற்கின்றார்கள். இந்நிலையில் படகில் வெளிநாடுகளுக்குச் செல்வது தொடர்பில் எமது மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் சாணக்கியன் எச்சரித்தார்.
புதியது பழையவை