மரணம் வரையிலும் சம்பந்தன் ஐயா போன்றவர்கள், இலங்கையின் அரசியலை ஊகித்துக் கொள்ளவில்லையென்பது மிகவும் கவலையான விடயம் என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தினை நேற்றைய தினம் (13.01.2023) தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி செலுத்தியுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி தவிர்ந்த உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடவுள்ளதாக இதன்போது இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
போலித் தேசியவாதி
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,“பிராந்திய மட்டத்தில் அரசியல் கட்டமைப்புகள் பலப்படுத்தப்பட வேண்டும். அதன் அடிப்படையில் கடந்த காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிதைவும் கிழக்கு சார்ந்த ஒரு கூட்டமைப்புக்கான சாத்தியத்தினை அதிகரித்துள்ளது.
அதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தினை மையப்படுத்திய அனைவரும் போராட்ட அமைப்புகளிலிருந்து வெளியேறியவர்கள்.
போராட்டத்தின் வலி தெரிந்த அமைப்புகளோடும் நாங்கள் பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருக்கின்றோம். இருந்தபோதிலும் அவர்கள் இன்னமும் போலித் தேசியவாதிகளை நம்பியிருக்கின்றார்கள். அது தோல்வியில் தான் முடியும் என நம்புகின்றேன்.
கிழக்கு மாகாணத்தில் ஒரு கூட்டமைப்பு
கிழக்கு மாகாணத்தில் ஒரு கூட்டமைப்பினை உருவாக்குவதற்கு நாங்கள் கலந்து பேசி வருகின்றோம்.
இந்த நாட்டின் அரசியலில் இவ்வளவு காலமும் சீரழிந்து சின்னாபின்னமாகி பொருளாதார இழப்புகளுக்கு காரணமாகயிருந்தவர்கள் இக் கொள்கையினை வகுத்தவர்கள்.
தாங்கள் மட்டும் என்ற எண்ணக்கருக்களை உருவாக்கிய யாழ்ப்பாணத்தில் பிறந்த சிலர், தாங்கள் மாத்திரம் தான் என்ற எண்ணக்கருவினைக் கொண்டவர்களைத் தான் மேட்டுக்குடிகள் என்று சொல்கின்றோமே ஒழிய வடபகுதியிலிருக்கும் எல்லோரையும் சொல்லவில்லை.
அவர்கள் இப்போதும் தங்களது ஆதிக்கத்தினை நிலைநாட்டுவதற்கு பலமாக போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
அதன் தீர்மானத்தின் ஒரு பகுதியே இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு சிதைந்துள்ளதாகும். அந்த மேட்டுக்குடியின் சித்தாந்ததினால் எடுக்கப்பட்ட முடிவுகளே இதற்கு காரணம்.
சுமந்திரனை நாங்கள் சட்டத்தரணியென்றே நினைத்தோம், ஆனால் கணக்கு வாத்தியார் போல கணக்கு படிப்பிக்கின்றார், தொழில்நுட்பம் தொடர்பாக அவருக்குத்தான் அந்த கணக்கு தெரியும் எனக்கு தெரியாது.
வடகிழக்கு இணைப்பு
இன்று வடகிழக்கு இணைப்பு மாகாணசபை தொடர்பில் பேசும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அன்றைய நிலைப்பாட்டை யாரும் மறந்துவிடக்கூடாது.
2008ஆம் ஆண்டு நாங்கள் தேர்தலில் போட்டியிடமாட்டோம் கொள்கை ரீதியான முரண்பாடு என பல விமர்சனங்களை செய்தார்கள்.
2008ஆம் ஆண்டு நான் முதலமைச்சராக வந்த போது என்னை வரவிடாமல் செய்வதற்கு முஸ்லிம் காங்கிரசுக்கு ஆதரவு வழங்கினார்கள்.
இரண்டாது முறை தவிறவிட்டு அடுத்த தடவை முதலைமைச்சர் பதவியை தமிழ்தேசிய கூட்டமைப்பு எடுக்க வேண்டும் என்று சம்பந்தன் ஐயாவிடம் சென்று கதைத்தோம்.
கிழக்கில் போராடியவர்கள் பல இழப்புகளை சந்தித்தவர்கள் என்ற அடிப்படையில் கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்தவர் முதலமைச்சராக வரவேண்டும் என்பதற்காக எனது முழு ஆதரவினையும் தருகின்றேன் என சம்பந்தன் ஐயாவிடம் கூறியபோது அதனை உதாசீனம் செய்தார்.
அதனால் அமைச்சர் ஹாபீஸ் சொல்வது உண்மையில்லை.நாங்கள் சாதகமான விடயங்களை ஊகித்துக்கொள்கின்றோம்.
சம்பந்தன் ஐயா போன்ற தலைவர்கள் மரணம் வரையிலும் இலங்கையின் அரசியலை ஊகித்துக் கொள்ளவில்லையென்ற கவலை எனக்கு இன்னும் இருக்கின்றது.”என தெரிவித்துள்ளார்.