ஈழத் தமிழர்களுக்காக தன்னை ஈகம் செய்த - ஈகைப்பேரொளி முருகதாசனின் 14 ஆம் ஆண்டு நினைவு தினம்ஜ.நா மனித உரிமை முன்றலில் கடந்த 2009 ஆம் ஆண்டில் ஈழத்தமிழருக்கு நீதி கோரி தீக்குளித்து மரணமடைந்த ஈகைப்பேரொளி முருகதாசனின் 14 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று நினைவு கூறப்பட்டது

லண்டனில் ஈகைப்பேரொளி முரகதாசனின் கல்லறை அமைந்துள்ள கென்டன் கல்லறை பூங்காவில் இன்று காலை உணர்வுபூர்வமான நிகழ்வு இடம்பெற்றது.

இதேவேளை வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் ஈகைப்பேரொளி முருகதாஸனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.கடந்த 2009 ஆம் ஆண்டில் ஈகைப்பேரொளி முருதாசன், பேரினவாத அரசின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது “சர்வதேசமே ஈழத்தமிழர்களைக் காப்பாற்று” என உரத்துக் குரல்கொடுத்தவாறு தீயிற்கே தன்னுடலை இரையாக்கியிருந்தார்.

7 பக்கங்களில் “உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்” என்ற தலைப்பில் ஒரு மரண சாசனத்தை எழுதி வைத்து விட்டு ஜெனீவா மனித உரிமை முன்றலில் 2009 பெப்ரவரி 12 ஆம் திகதி அன்று இரவு முருகதாசன் தீக்குளித்து மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழர்களுக்கான சர்வதேச நீதியை வலியுறுத்தி தன்னை ஈகம் செய்யத்துணிந்த முருகதாசன் ஈழதாசனாக ஒவ்வொரு தமிழரின் இதயங்களிலும் வாழ்ந்துகொண்டே இருக்கிறார் எனலாம்.

ஒரு தற்கொடையாளியாக தமிழர்களுக்காக தன்னை எரியும் நெருப்பின் பசித்த நாவிற்கு ஆகுதியாக்கி தன்னை எரித்துக்கொண்ட ஈகைப்போராளி முருகதாசன் அவர்களை இன்றைய நாளில் ஐபிசி தமிழ் கனதியான வலிகளுடன் நினைவேந்துகிறது.
புதியது பழையவை