இறுதிப்போரின் போது கொல்லப்பட்ட ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தியின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று.
ஊடகம் என்பது அடையாளம் என்று சொல்லுவார்கள் .உள்ளதை உள்ளபடி நேர்மையின் பக்கம் நின்று அடையாளம் காட்டும் ஜனநாயகத்தின் ஒரு கண் என்று சொல்லலாம். அப்படிப்பட்ட தார்மீகப்பணியை சிரமேற்கொண்டு தமது இன்னுயிரை ஈந்தவர்கள் பலர்.
அந்த வரிசையில் இற்றைக்கு 14 ஆண்டுகளுக்கு முன் இதேபோன்றதொரு நாளில் தன்னையும் இணைத்துக் கொண்டவர்தான் நாட்டுப்பற்றாளர் புண்ணிய சத்தியமூர்த்தி
மட்டக்களப்பினை பூர்வீகமாக கொண்ட இவர் தாயகத்தின் ஊடகப்பரப்பில் தனித்துவமான தனது பங்களிப்புகளால் பெரிதும் அறியப்பட்டவர். தனக்கான பணியை ஆத்மார்தமாக உணர்ந்தவராய் ஒரு ஊடகன் என்ற வரையறைக்குட்பட்டு தமிழின நசுக்கல்களையும் தமிழ் மக்களின் வலி நிறைந்த வாழ்வினையும் ஊடக வாயிலாக உலகம் அறியச்செய்தார்.
தாயகத்தில் செயற்பட்ட பல்வேறு ஊடக நிறுவனங களோடு இணைந்து பணியாற்றிய சத்திமூர்த்தி செய்திப்பார்வைத் தொகுப்பு, அரசியல் கலந்துரையாடல்கள், உள்ளுர் நடப்புக்கள் போன்ற பரிமானங்களில் அதிகம் பேசப்பட்ட ஒருவராக தன்னை வரித்துக்கொண்டார்.
தொடர்ச்சியாக தாயகத்தில் ஊடக வளர்ச்சியினை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட தமிழ் ஊடக அறிவியல் கல்லூரியின் தோற்றம் முதல் அதன் இறுதிக் காலம் வரையில் அவரது கல்லூரியுடனான பணி இடையறாது தொடர்ந்தது எனலாம் தனது பார்வையில் சரி எனப்பட்டதை வெளிப்படுத்துவதில் சத்தியமூர்த்தி அவர்கள் எப்போதும் பின்நின்றதில்லை எனலாம்.
சமாதான காலத்தின் பின்னான பல சஞ்சிகைகள் வெளியீடுகள் தாயகத்திலும் , புலம் பெயர் தளத்திலும் அதிகமாக முன்னெடுக்கப்பட்டன. அக்காலப்பகுதியில் சத்தியமூர்த்தி அவர்களின் பணி ஊடக புலத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது.
பத்திரிகை முதல் தொலைக்காட்சி வரையான அவரது பரந்துபட்ட ஊடக அனுபவம் முறையாகவே மக களுக்கு பயன்பட்டது என்று சொன்னால் அது மறுப்பதற்கில்லை.
தாயகத்தில் யுத்தம் உச்சம்பெற்ற நெருக்கடியான காலத்திலும் ஒதுங்கிவிடாமல் ஊடகப்பணியினை ஆற்ற வேண்டும் என்ற வேட்கையோடு எறிகணை தாக்குதலுக்கு இலக்காகி உயிர்துறந்தார்.
இவரது மரணத்தின் பின் தமிழர் தரப்பு நாட்டுபற்றாளர் என்ற உயர் கௌரவ நாமம் வாழங்கி அஞ்சலித்தது. உயர் ஊடக லட்சியத்தோடு ஓய்ந்து போன புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி அவர்களின் வெற்றிடம் தமிழ் ஊடகப்பரப்பில் என்றுமே நிவர்த்தி செய்யப்பட முடியாத ஒரு பேரிழப்பாகும்.
மறைந்தும் தனது நெஞ்சரம் கொண்ட ஊடக ஆற்றுகை மூலமாக மூலமாக உலகத்தமிழர்களின் நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் சத்தியமூர்த்தி அவர்களை இன்றைய நாளில் ஐபிசி தமிழ் நினைவுகூருகின்றது.