ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சித் தேர்தல் - பெப்ரல் அமைப்பு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!



ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சித் தேர்தல் இரண்டு வருடங்கள் வரை தாமதிக்கும் சாத்தியம் காணப்படுவதாகப் பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாகக் கருத்து வெளியிட்டுள்ள பெப்ரல் அமைப்பின் தலைவர் ரோஹன ஹெட்டியாரச்சி, உள்ளூராட்சித் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விடுவிப்பதில் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி தடங்கல்களை ஏற்படுத்துகின்றார்.


இவ்வாறான செயற்பாடுகள் சர்வதேச மட்டத்தில் நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும். தற்போதைக்கு மாகாண சபைகள் செயற்படவில்லை.

வேட்பு மனுக்களை இரத்து
எதிர்வரும் மார்ச் மாதத்தின் உள்ளூராட்சி மன்றங்களும் அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும். நாடாளுமன்றம் தற்போதைக்கு ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

அவர் விரும்பிய நேரத்தில் அதனைக் கலைக்க முடியும். இது ஒரு ஆபத்தான போக்காகும் தற்போதைக்கு எல்லை நிர்ணய அறிக்கையை வைத்து உள்ளூராட்சித் தேர்தலுக்காகக் கோரப்பட்டுள்ள வேட்பு மனுக்களை இரத்துச் செய்ய அரசாங்கம் முயற்சிக்கின்றது.

அவ்வாறு இரத்துச் செய்யப்பட்டால், எல்லை நிர்ணய அறிக்கையின் மீளாய்வு நடவடிக்கைகள் நிறைவடைந்து மீண்டும் வேட்பு மனு கோரப்படுவதற்கு இரண்டு வருடங்கள் வரை செல்லும். அவ்வாறான கட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தல் சுமார் இரண்டு வருடங்கள் வரை பிற்போடப்படலாம்.

இவ்வாறான நிலைமையொன்று ஏற்படுவதைத் தடுக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்றும் பெப்ரல் அமைப்பின் தலைவர் ரோஹன ஹெட்டியாரச்சி தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.
புதியது பழையவை