உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பிரசாரங்களை நிறுத்துவது நல்லது - ஜனாதிபதி ரணில்உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான ஐ.தே.க வேட்பாளர்களுக்கான பிரசாரங்களை நிறுத்துவது நல்லது என சபை உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்களிடம் ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடுகளை வழங்க முடியாது என திறைசேரி , தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு வரை தேர்தலைஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்படும்
இந்த நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை 2024 ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபயவர்தன தெரிவித்துள்ளார்.


காலி மகாநகர சபை கேட்போர் கூடத்தில் நேற்று (17) நடைபெற்ற காலி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சபை உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

நிதியமைச்சராக பதவி வகிக்கும் ரணில் விக்கிரமசிங்க, 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் ஐ.தே.க நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்தார்.

அதோடு, தேர்தலுக்காக, பொது திறைசேரிக்கு பணம் ஒதுக்கும் திறன் இல்லை என்றும் தெரிவித்தார். அதன் விளைவாக, 2024 ஆம் ஆண்டு இது ஒரு சிறிய தேர்தலாக இருக்கும் என்றும் கூறியதாக வஜிர அபயவர்தன கூறினார்.


உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50 வீதத்தால் குறைத்து புதிய எல்லை நிர்ணய அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய உள்ளுராட்சி மன்ற தேர்தலை 2024 ஆம் ஆண்டு நடத்த ஏற்பாடு செய்ய முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதையும் குறிப்பிட்டார்.

2023 உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இரத்துச் செய்யப்பட உள்ளதாகவும், எனவே காலி மாவட்ட ஐ.தே.க வேட்பாளர்களுக்கான பிரசாரங்களை நிறுத்துவது நல்லது என சபை உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்களிடம் ஜனாதிபதி ரணில் கூறியுள்ளதாகவும் வஜிர அபயவர்தன தெரிவித்தார்.
புதியது பழையவை