அரசியல் தீர்வில்தான் எங்களுடைய வாழ்வும் தங்கியுள்ளது - இரா.சம்பந்தன்



அரசியல் தீர்வு ஏற்படாவிட்டால் எங்களுடைய தாயகம் சரித்திர ரீதியாக எமது தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த பிரதேசங்கள் படிப்படியாக அபகரிக்கப்பட்டு விடும். 

எனவே, உடனடியாக அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என மூத்த அரசியல் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

அண்மையில், திடீர் சுகவீனமுற்று நேற்றைய தினம் அவரை தொடர்பு கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இந்தப் புதிய வருடத்தில் அரசியல் தீர்வு சம்பந்தமான விடயத்தில் நாம் முழுஅர்ப்பணிப்புடன் செயல்படுகின்றோம். அரசியல் தீர்வு தொடர்பான எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கேற்ற வகையில் புதிய அரசமைப்பு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும். அதைப் பெறுவதற்கான வாய்ப்பும் இல்லாமல் இல்லை. எல்லோரும் சேர்ந்து அந்தக் கருமத்தை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும். அரசியல் தீர்வு ஏற்படாவிட்டால் எங்களுடைய தாயகம் – சரித்திர ரீதியாக எமது தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த பிரதேசங்கள் படிப்படியாக அபகரிக்கப்பட்டு விடும். அதை நாங்கள் அனுமதிக்க முடியாது.

அரசியல் தீர்வு கிடைத்தால் எங்களுடைய பிரதேசங்களின் நிர்வாகங்களை நாங்களே பாரமெடுத்து அவற்றை நடத்தக்கூடிய வழியேற்படும். எனவே, அரசியல் தீர்வு என்பது எங்களுடைய நீண்டகால இலக்கு மாத்திரம் அல்ல எங்களுடைய வாழ்வும் அதில்தான் தங்கியுள்ளது என இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை