மட்டக்களப்பு சிறைச்சாலை மல்யுத்த போட்டியில் தேசிய ரீதியில் முதலிடம்!



மல்யுத்த விளையாட்டில் தேசிய ரீதியில் மட்டக்களப்பு சிறைச்சாலையை தேசிய ரீதியில் முதலிடத்திற்க்குக் கொண்டு வந்த, மட்டக்களப்பு சிறைச்சாலை உத்தியோகத்தர்களைப்
பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு, மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் ந.பிரபாகரன் தலைமையில் இன்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு சிறைச்சாலை வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் சிறப்பு அதிதியாக தேசிய பயிற்றுவிப்பாளரும், சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டு கழகத்தின் பயிற்றுவிப்பாளரும்,
மட்டக்களப்பு இந்து கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியருமான வே.திருச்செல்வம் கலந்துகொண்டார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர், கல்முனை சிறைக்கூடத்தின் நிர்வாக உத்தியோத்தர் உள்ளிட்ட மட்டக்களப்பு சிறைச்சாலையின் உயர் அதிகாரிகள்
மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், தேசிய ரீதியில் சாதனை நிலைநாட்டிய வீரர்களுக்கு பதக்கம் அணிவித்து, சான்றிதழ்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும்
பணப்பரிசும் வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு சிறைச்சாலை சாதனையினை படைப்பதற்காக பயிற்சியினை வழங்கிய பயிற்றுவிப்பாளர் வே.திருச்செல்வம் சிறைச்சாலை அத்தியட்சகரினால்
கௌரமளிக்கப்பட்டதுடன், பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் முதல் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு புதிய சிறைச்சாலை அத்தியட்சகராக ந.பிரபாகரன் கடமைப் பொறுப்பை ஏற்றதன் தொடர்ச்சியாக மட்டக்களப்பு சிறைச்சாலையின் உத்தியோகத்தர்கள் பல்வேறு துறைகளிலும் முன்னிலை வகித்து வருவதுடன், விளையாட்டு துறையில் தேசிய சாதனைகளை நிலைநாட்டிவருகின்றது.

அண்மையில் இடம்பெற்ற இலங்கை சிறைச்சாலைகளுக்கிடையிலான மல்யுத்த போட்டிகளில் 9 தங்கப் பதக்கங்கள், 2 வெள்ளிப் பதக்கங்கள், 4 வெண்கலப் பதக்கங்கள்
அடங்கலாக 15 பதக்கங்களைப் பெற்று தேசிய ரீதியில் முதலிடத்தை மட்டக்களப்பு சிறைச்சாலை பெற்றுக்கொண்டது.

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகராக ந.பிரபாகரன், யாழ்ப்பாண சிறைச்சாலையில் பிரதான ஜெயிலராக கடமையாற்றும் போது கடந்த 2018 ஆம் ஆண்டு, யாழ்ப்பாணச் சிறைச்சாலைக்கும் இதேபோன்றதொரு பெருமையை தேசிய ரீதியில் பெற்றுக்கொடுத்தார்.

மல்யுத்தப் போட்டியில் மட்டக்களப்பு சிறைச்சாலை சார்பாக பங்குபற்றிய சிறைச்சாலை உத்தியோகத்தர் சிவபாலன், இலங்கை மல்யுத்த வீரர் குழாமில் இடம்பிடித்து இலங்கை சிறைச்சாலை திணைக்களத்திற்கும் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்
அவருக்கும் நிகழ்வின்போது கௌரவமளிக்கப்பட்டது.

புதியது பழையவை