தமிழர்களுக்காக உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின் நினைவு தினம் மட்டக்களப்பில் ஏற்பாட்டுக்குழுவினரின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றுவரும் நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்களுக்கும் தியாகதீபம் அன்னை பூபதி நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினருக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
மட்டக்களப்பு நாவலடியில் உள்ள தியாகதீபம் அன்னை பூபதியின் கல்லறையில் நேற்று(19.04.2023) கருத்துமோதல்கள் ஏற்பட்டுள்ளன.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
தியாகதீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினரால் இம்முறை மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் அனைத்து அமைப்புகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் அறிவிப்புகள் வழங்கப்பட்டதுடன் ஊடகங்கள் வாயிலாகவும் அறிவிப்புகள் வழங்கப்பட்டிருந்தன.
கடந்த காலங்களில் ஒழுங்கில்லாமல் ஒவ்வொருவருடைய வசதிகளுக்கும் நேரத்துக்கும் ஏற்ப தியாக தீபத்தின் தீபச்சுடர் ஏற்றப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டது.
அவ்வாறு இல்லாமல் இந்தமுறை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளவர்களை ஒருங்கிணைத்து ஒரு குறித்த நேரத்தில் செய்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன.
ஏற்பாட்டு குழுவின் எதிர்ப்பு
இந்த நிலையில் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப்பட்ட தியாகதீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நினைவுஊர்தி நேற்று முன்தினம் மட்டக்களப்புக்கு வருகைதந்து (18.04.2023) அம்பாறைக்கு சென்றதுடன் நேற்று(19.04.2023) மீண்டும் மட்டக்களப்பு வந்தடைந்தது
இதன்போது காலை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் நாவலடியில் உள்ள தியாகதீபம் அன்னை பூபதியின் கல்லறையில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தச்சென்ற நிலையில் அங்கு ஏற்பாட்டுக்குழுவினால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன்,தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் ஆகியோர் இணைந்திருந்தனர்.
அதனை தொடர்ந்து தியாகதீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நினைவுஊர்தியில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டுள்ளது.
அஞ்சலியை தொடர்ந்து கல்லறைக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் சென்று அஞ்சலி செலுத்திய நிலையில் தியாகதீபம் அன்னை பூபதி நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினருக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையே கருத்துமோதல்கள் ஏற்பட்டுள்ளன.
தனித்து செயற்பட முடியாது
தாங்கள் அங்கு கல்லறையில் அஞ்சலி செலுத்த மட்டுமே வந்ததாகவும் வேறு எந்த குழப்பங்களை ஏற்படுத்தும் நோக்கிலும் செயற்படவில்லையென தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் ஒரு ஏற்பாட்டுக்குழு உருவாக்கப்பட்டு எந்தவித அரசியல் நோக்கங்களும் இல்லாமல் அனைவரையும் ஒருங்கிணைத்து இந்த நிகழ்வினை நடாத்தவேண்டும் என்று நோக்குடன் செயற்பட்டுவரும் நிலையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மட்டும் இவ்வாறு தனித்துவந்து செயற்படுவதை ஒருபோதும் இங்கு அனுமதிக்கமுடியாது என தியாகதீபம் அன்னை பூபதி நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினர் இதன்போது தெரிவித்துள்ளனர்.
இதன்போது இருதரப்பினரிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அங்கிருந்து கலைந்துசென்றுள்ளனர். தமிழ் கட்சிகளின் செயற்பாடுகளே இந்த நாட்டில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு காரணம் எனவும் குழப்பும் நோக்குடனேயே மட்டக்களப்பு இவ்வாறானவர்கள் வருவதாகவும் ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் சிவஸ்ரீ முரசொழிமாறன் குருக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.