சித்திரா பௌர்ணமி எனப்படுவது சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தன்று சைவ மக்களால் அனுட்டிக்கப்படும் ஒரு விரத நாளாகும்.
சித்திரை மாதத்தில் உச்சம் பெறுபவர், சூரியன். அதேபோல் அந்த மாத பவுர்ணமி அன்று முழு மதியாக திகழ்பவர் சந்திரன்.
ராஜகிரகங்களான சூரியனும், சந்திரனும் முழு பலத்துடன் இருக்கும் மாதம் என்பதால் சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமி சிறப்புக்குரியதாக மாறுகிறது.
சித்ரகுப்தர் அவதரித்த நாள் சித்ரா பௌர்ணமி
இந்த நாளில் கிரிவலம் வருவது சிறப்பான பலனைப் பெற்றுத் தரும். எமதர்மனின் கணக்காளராகவும், பாவ-புண்ணிய கணக்குகளை பாரபட்சம் இன்றி எழுதும் பணியைச் செய்பவருமான சித்ரகுப்தர் அவதரித்த நாள், சித்ரா பவுர்ணமி நாளாகும்.
எனவே இந்நாளில் சித்ரகுப்தரை வழிபாடு செய்வதும் நன்மைகளை வாரி வழங்கும் இந்நாளில் சைவர்கள் விரதமிருந்து கோயில்களிலும், ஏனைய புனித இடங்களிலும் கஞ்சி காய்ச்சி சித்திர புத்திரனார் கதை படித்து எல்லோருக்கும் கஞ்சி வார்ப்பர்.
இந்நாளில் முன்னோர் பொங்கல் வைத்துப் பூச்சொரிந்து குரவைக் கூத்தாடி வசந்த விழாவைக் கொண்டாடினர்.
சித்திர குப்தர் வழிபாடு
பூர்வ ஜென்ம கர்மாக்களின் படி நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்னல்களில் இருந்து நம்மை பாதுகாக்கவும் சித்ரகுப்தரை வழிபட வேண்டும். அவருக்கு மிகவும் பிடித்தமான சித்திரன்னங்கள் அதாவது கலவை சாதங்கள் படைத்து வழிபடலாம்.
சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு இரவு சாப்பாட்டை குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ஒன்றாக சேர்ந்து நிலா வெளிச்சத்தில் அமர்ந்து சாப்பிட்டால் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை பலப்படும் என்கிற ஐதீகம் உண்டு.
இந்நாளில் புனித தீர்த்தங்களில் நீராடுவது, நம் பாவத்தை போக்கும். எனவே தீர்த்தக் குளங்கள் இருக்கின்ற கோவிலுக்கு சென்று வழிபடுவது, திருவண்ணாமலை கிரிவலம் செல்வது போன்றவையும் இந்நாளில் செய்யலாம்.
ஏழை, எளிய குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம் வாங்கி தருவது சித்ரகுப்தரின் அருளைப் பெறுவதற்கு சிறந்த பரிகாரமாக இருக்கிறது.
அன்னையரின் பிதிர்த் தினம்
காலப்போக்கில் இதை சிவனுடைய சிறப்பு விழாவாகவும், இறந்த அன்னையரின் பிதிர்த் தினமாகவும் அனுட்டிக்க ஆரம்பித்தனர். தாய் உயிருடன் இல்லாத ஆண்கள் அனைவரும் காலையில் எழுந்து நீர் நிலைகளுக்குச் சென்று நீராடி இறந்த தாயாரை நினைத்து தர்ப்பணம் பண்ணுவர்.
பின் வீட்டிற்கு வந்து, தாயார் படத்திற்கு உணவு படைத்து பின்னர் குடும்பத்துடன் உணவு உண்பர். பொதுவாக தாயார் இறந்த ஆண்டுத் திவசம் (முதலாம் ஆண்டு) முடியும் வரை இவ்விரதம் அநுட்டிக்கக் கூடாது என்பர்.
அதேசமயம் பெண்கள் தர்ப்பணம் பண்ணாது இவ்விரதத்தை அனுட்டிப்பர்.