முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.
கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நொச்சிமுனையில் உள்ள ஒன்றியத்தின் அலுவலகத்தில் நேற்றைய தினம் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ லோகநாதன் குருக்கள் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. திருகோணமலை மற்றும் அம்பாறை,மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலிருந்து இந்துக் குருமார்கள் கலந்துகொண்டனர்.
கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் அலுவலகத்தில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு தென்னை மரத்திற்கு உயிர்நீர்த்தவர்களின் நினைவாக மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் படுகொலைசெய்யப்பட்ட மக்களின் ஆத்மசாந்திக்காக பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டு, அகவணக்கமும் செலுத்தப்பட்டது.
கல்லடி,சிவானந்தா தேசிய பாடசாலைக்கு முன்பாக உப்புக்கஞ்சி காய்ச்சப்பட்டு அதனை மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,இந்துக்குருமார் ஒன்றிய உறுப்பினர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
