பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் தமிழ் அரசியல்வாதிகள்கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்குள் உள்ள சேவை சந்தையின் வாடகை கட்டணம் அதிகரித்தமைக்கு எதிராக வர்த்தகர்கள் கடந்த மாதம் 23 ஆம் திகதி சந்தையை பூட்டி எதிர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

1500 ரூபா வாடகை மாதாந்தம் பெறப்பட்டு வந்த நிலையில் மே மாதம் தொடக்கம் 7500 ரூபா வாடகையாகவும், 600 ரூபா கழிவகற்றலுக்கும் என 8100 ரூபா அறவிடுவதற்கு கரைச்சி பிரதேச சபை தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தே சந்தை வியாபாரிகள் தங்களது வியாபார நிலையங்ளை மூடி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

வர்த்தகர்களின் எதிர்ப்பினை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அ. வேழமாலிகிதன் கிளிநொச்சி சேவைச் சந்தை வர்த்தகர் அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் இராஜபாலன் புவனேஸ்வரன், உபதலைவர் கறுப்பையா ஜெயக்குமார், கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் வர்த்தக சங்கத்தின் முன்னாள் தலைவருமான அருளானந்தம் யேசுராஜன் உள்ளிட்டோர் கடந்த மாதம் 26 ஆம் திகதி வடக்கு மாகாண ஆளுநரை நேரடியாகச் சந்தித்துக் அதிகரித்த வாடகை கட்டணத்தை குறைக்குமாறும் இது வர்த்தகர்களை கடுமையாக பாதிக்கிறது என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இச் செயற்பாடே வர்த்தகர்களிடம் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆதாவது கரைச்சி பிரதேச சபையில் தமிழரசு கட்சியினர் அ. வேழமாலிகிதன் தலைமையில் ஆட்சியில் இருந்த போதே சந்தை கடைகளுக்கான வாடகை கட்டணத்தை அதிகரிப்பதற்கான விலை மதிப்பீட்டுக்கு கோரிக்கை விடுத்து அதனை மேற்கொண்டுள்ளனர்.


இச் செயற்பாடுகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


ஆதாவது 2018 தொடக்கம் 2023 மார்ச் வரை மக்கள் பிரதிநிதிகளை கொண்ட சபை காணப்பட்டது. 29.04.2020 ஆம் திகதி கரைச்சி பிரதேச சபையால் விலைமதிப்பீட்டுத் திணைக்களத்திற்கு வாடகை கட்டணத்தை அதிகரிப்பதற்காக விலை மதிப்பீட்டுக்கு கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

இதன் பின்னர் இரண்டாவது தடவையாகவும் 15.12.2021 ஆம் திகதியும் சபையால் விலை மதிப்பீட்டுத் திணைக்களத்திற்கு வாடகை கட்டணத்தை அதிகரிப்பதற்கான விலை மதிப்பீடுகளை மேற்கொள்ளும் கோரிக்கை எழுத்து மூலம் முன் வைக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் விலை மதிப்பீடுகளை மேற்கொள்ளப்பட்டே தற்போது சந்தை வர்த்தகர்களிடம் கடந்த மே மாதம் தொடக்கம் அதிகரித்த வாடகை கட்டணம் அறவிடப்படுகிறது.


ஆனால் கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடியான சூழலில் வியாபாரிகள் பாதிக்கப்பட்டிருந்த அக் காலத்திலேயே அதிகரித்த வாடகை கட்டணத்தை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவிட்டு இப்போது அவர்களே அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆளுநரை சந்திப்பது என்பது பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் நடவடிக்கையே என்றும் தங்களின் அரசியலுக்காக இவ்வாறு வர்த்தகர்களின் வாழ்வாதாரத்தோடு விளையாடுவது மிகவும் மோசமான செயல் எனவும் வர்த்தகர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.


புதியது பழையவை