மட்டக்களப்பில் டெங்கு தடுப்பு உதவியாளர்களால் கவனயீர்ப்புப் போராட்டம்!மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள டெங்கு தடுப்பு உதவியாளர்கள் இன்று (14)மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் காரியாலயத்திற்கு முன்பாக
கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்து இலங்கை டெங்கு தடுப்பு உதவியாளர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் இந்த கவனஈர்ப்பு போராட்டம்
முன்னெடுக்கப்பட்டது. கடந்த ஏழு வருடங்களாக தாங்கள் தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றிவரும் நிலையில் தம்மை நிரந்தர நியமனங்களுக்குள் உள்வாங்குமாறு
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

எங்கள் வேலையை நிரந்தரமாக்கு, 22 ஆயிரம் ரூபா எமது வாழ்வாதாரத்திற்கு போதாது, டெங்குவை கட்டுப்படுத்த புகையூட்டலையும் களப்பணியையும் 07வருடமாக முன்னெடுத்துவருகின்றோம், போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் அவர்கள் தாங்கியிருந்தனர்.

தற்போதைய ஜனாதிபதி பிரதமராகயிருந்த காலத்திலேயே தமக்கு நியமனங்கள் வழங்கப்பட்டதாகவும், நிரந்தரமாக்கப்படுவோம் என்று உறுதிமொழிகள் வழங்கப்பட்டதாகவும், ஜனாதிபதி அந்த உறுதிமொழியை காப்பாற்றுவார் என்று நம்புவதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

டெங்கு தடுப்பு உதவியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனும் கலந்துகொண்டு தனது ஆதரவினை வழங்கியதுடன் கலந்துரையாடல்களையும் நடாத்தினார்.
புதியது பழையவை