நாட்டை தொழில்நுட்பம் மற்றும் பசுமைப் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்தும் வேலைத்திட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு தனியார் துறையினருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
தேசிய தகவல் தொழிநுட்பம் மற்றும் வர்த்தக செயல்முறை முகாமைத்துவத் தொழில் கண்காட்சியை நேற்று ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்தார்.
இன்று வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புகின்ற தருணத்தில் நாம் இருக்கிறோம். நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்கினால் மட்டும் போதுமானதல்ல. பெற்ற கடனை திரும்பச் செலுத்தவேண்டும். நாம் கடன் சக்கரத்தில் தொடர்ந்து இருக்கப்போகின்றோமா? அல்லது அதிலிருந்து வெளியேறி முன்னேறிச் செல்லப்போகின்றோமா என்பதில் கவனம் செலுத்தவேண்டும். எனவே, இந்த நாட்டில் மிகவும் போட்டி நிறைந்த பொருளாதாரத்துடன், நாம் உலக சந்தையை நோக்கி நகர்ந்து, வணிகப் பொருட்கள் மற்றும் சேவைகளின் வருமானத்தை அதிகரித்து மேலதிகக் கையிருப்பை ஏற்படுத்தவேண்டும். அவ்வாறு செயற்படுவதனூடாக இந்த நாட்டைவிட்டு வெளியேறியவர்களை இலங்கைக்கு மீண்டும் வரவழைக்கமுடியுமென நம்புகிறோம்.
இந்த திட்டத்தின் முக்கிய அங்கம் நமது பொருளாதார நவீனமயமாக்கல். போட்டி நிறைந்த பொருளாதாரம், பசுமைப் பொருளாதாரம் மற்றும்
டிஜிட்டல் பொருளாதாரம் அதன் முக்கிய பகுதிகள். டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பில் பார்க்கையில், நாம் முன்னோக்கிச் செல்லும்போது பல விடயங்களை நிறைவு செய்யவேண்டியுள்ளது. அதன்போது, தகவல் தொழில்நுட்பத்தில் அறிவும் பயிற்சியும் கொண்ட மனித வளம் தேவை. அந்த வளத்தைக் கட்டியெழுப்ப நாம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பொறிமுறைப்படி அரசாங்கம் 3 பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது. மேலும், அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்கவும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அடுத்து, தற்போதுள்ள 450 தொழிற்பயிற்சி மையங்களை இணைத்து
தொழிற்கல்லூரிகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தொழிற்பயிற்சி நவீனமயமாக்கப்படவுள்ளது. இவை அனைத்தையும் செய்யும் அதேவேளை, பாடசாலைகளுக்கும் இந்த புதிய தொழில்நுட்பத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் எதிர்காலம் தொழில்நுட்பம் மற்றும் பசுமைத்துறை ஆகியவற்றில் தங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.