இலங்கையில் ஏழைகளை குறிவைத்து சிறுநீரகங்களை கடத்தும் வைத்தியசாலைகள்கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள வறிய குடும்பங்களை இலக்கு வைத்து சிறுநீரக கடத்தல் தொடர்பில் நான்கு முன்னணி தனியார் வைத்தியசாலைகளில் இருந்து அறிக்கைகள் கோரப்பட்டதாக கொழும்பு குற்றப்பிரிவு கொழும்பு மேலதிக நீதவான் திருமதி ரஜீந்திர ஜயசூரிய முன்னிலையில் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் நான்கு முறைப்பாடுகளை ஆராய்ந்து உண்மைகளை நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தினால் பெறப்பட்ட உத்தரவுகளின் பிரகாரம், சிறுநீரக சத்திரசிகிச்சை தொடர்பில் நான்கு தனியார் வைத்தியசாலைகளில் அறிக்கைகள் கோரப்பட்டதுடன், இதுவரையில் ஒரு வைத்தியசாலையில் இருந்து அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.


தனியார் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட பெண்
விசாரணையின் படி, கொழும்பு 15, கஜிமாவத்தையைச் சேர்ந்த மேரி ரஞ்சனி பெரேரா (50) என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, சிறுநீரகத்தைப் பெற்றுக் கொள்வதற்காக தரகர் ஒருவரால் அவர் தனியார் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.


பத்து இலட்சத்திற்கு பதில் ஆறு இலட்சம்
சிறுநீரகம் வழங்குவதற்கு பத்து இலட்சம் ரூபா பணம் தருவதாக உறுதியளிக்கப்பட்ட போதிலும், சிறுநீரகத்தைப் பெற்றுக்கொண்ட தரகர் ஆறு இலட்சம் ரூபாவையே வழங்கியுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

குறித்த தரகர் யார் எனத் தமக்குத் தெரியாது எனவும் சந்தேகநபர்களை கண்டுபிடிப்பதற்காக விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நபர் தெரிவித்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

இந்த சந்தேகநபர்கள் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள வறிய குடும்பங்களை இலக்கு வைத்து சிறுநீரக கடத்தலை மேற்கொண்டுள்ளதாகவும், சிறுநீரக தானம் செய்பவர்களுக்கு வாக்குறுதியளித்த தொகையை விட குறைவாக கொடுத்து இந்த கடத்தலை மேற்கொண்டுள்ளதாகவும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
புதியது பழையவை