சீனாவின் வடமேற்கு பகுதியில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 7. 2 ஆக பதிவாகியுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
சீனா - கிர்கிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஜின் ஜியாங் மாகாணத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் இந்திய தலைநகர் டெல்லி வரை முதல் பாகிஸ்தானிலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல் ஆப்கானிஸ்தான் நாட்டிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நள்ளிரவு சீனாவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
சீனாவில் வடமேற்கில் அமைந்துள்ள ஜின்ஜியாங் மாகாணம் மலைப்பகுதிகள் நிறைந்தது. பாலைவனங்களையும் கொண்ட இந்த பகுதியில் அடிக்கடி நிலநடுக்கங்களும் ஏற்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், நேற்று இரவு இங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதி குலுங்கியது.
47 பேர் வரை இடிபாடுகளில் புதைந்ததாகவும் 200 க்கும் மேற்பட்டோர் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதாகவும் சீனாவின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவில் சமீப காலமாக இயற்கை பேரிடர்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக அதி கனமழை போன்ற இயற்கை பேரிடர்களால் அந்த நாடு கடுமையான பாதிப்பை சமீப காலமாக எதிர்கொண்டு வருகிறது.