மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு சில ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!


மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்றைய தினம் (13-02-2024) இடம்பெறுகின்ற நிலையில் சில ஊடகவியலாளர்களுக்கு இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கும், செய்தி சேகரிப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பில் அக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட ஊடகவியாளர்களால் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த பல ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு வந்த சில ஊடகவியலாளர்கள் இன்றைய கூட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு சில ஊடகவியலாளர்களைப் பழிவாங்கும் நோக்குடன் இவ்விடயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்து இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலே ஊடகவியலாளர்களால் மட்டக்களப்பு மாவட்ட செயலக முன்றலில் இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.




மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் ஊடக தணிக்கை ஏன்? மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரால் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்படும் ஊடகவியலாளர்கள் போன்ற வாசகங்களை ஏந்தி ஊடகவியலாளர்கள் இன்றைய எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதேவேளை அபிவிருத்திக் குழு இணைத்தலைவரும், இராஜாங்க அமைச்சருமான வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்ற ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடியதுடன், மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி இப்பிரச்சனைக்கு சுமூகமான தீர்வினை முன்வைப்பதாகத் தெரிவித்தனர்.




இதேபோன்று முன்னரும் ஊடகவியாளர்களுக்கு இவ்வாறான மறுப்பு இடம்பெற்று ஊடகவியலாளர்களால் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை