தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை பகிர்ந்தளிக்க முயற்சி!




இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவில் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்த நிலையில், அது தொடர்பில் தீர்மானம் எட்டுவதற்காக நேற்று வவுனியாவில் இடம்பெற்ற இரகசிய கலந்துரையாடலும் முடிவின்றி நிறைவடைந்துள்ளது.

தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி சர்ச்சைக்கு தீர்வு காணும் முகமாக தற்போதைய பதில் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம் தலைமையில் வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இரகசிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதில் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சிறிதரன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், மற்றும் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட இரு அணிகளையும் சேர்ந்த ச.குகதாசன், ஞா.சிறிநேசன், கோடீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது திருகோணமலையைச் சேர்ந்த குகதாசனும், மட்டக்களப்பைச் சேர்ந்த சிறிநேசனும் பொதுச் செயலாளர் பதவியை ஒவ்வொரு வருடமாக பகிர்ந்து கொள்வது தொடர்பில் பேசப்பட்டு இணக்கப்பாடு எட்டப்பட்டது. 

எனினும் முதலில் யார் ஒரு வருடம் பதவி வகிப்பது என்பது தொடர்பில் இருவருக்கும் இடையில் இணக்கப்பாடு இன்றி முரண்பாடுகள் ஏற்பட்ட நிலையில், முடிவுகள் எட்டப்படவில்லை.

இருவரும் தாம் பொதுச் செயலாளராக வருவதற்குரிய காரணங்களை நியாப்படுத்தியிருந்தனர். 

எனினும், இருவரும் பேசி இரண்டு நாட்களுக்குள் முடிவு தருமாறு கூறி, நடைபெற்ற இரகசிய கலந்துரையாடல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
புதியது பழையவை