இலங்கையில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் நிகழ்நிலை காப்புச் சட்டமூலம்




நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன கையெழுத்திட்டுள்ளார்.

அதன்படி இன்று (01-02-2024) முதல் இந்த சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.

நிகழ்நிலைக் காப்புச் சட்டம்
ஜனவரி மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தில் சபாநாயகர் இன்று கையெழுத்திட்டுள்ளார்.


இதற்கமைய இந்தச் சட்டமூலம் 2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டமாக நடைமுறைக்கு வருகிறது.

இந்நிலையில் இந்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளிப்படுத்த வந்த நிலையில் சபாநாயகர் இன்று கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் (ONLINE SAFETY BILL) என்றால் என்ன?

சட்டமூலத்தின் நோக்கங்கள்
பிரிவு 3 இல் கூறப்பட்டுள்ளபடி, சட்டமூலத்தின் நோக்கங்கள்:
• பொய்யான கூற்றுக்களின் அல்லது அச்சுறுத்தும், அதிர்ச்சியூட்டும் அல்லது துன்பமிழைக்கும் கூற்றுக்களின் தொடர்பாடலினால் விளைவிக்கப்படும் சேதத்திற்கு எதிராக  ஆட்களைப் பாதுகாத்தலும்;
• நீதிமன்றத்தை அவமதிக்கும் அல்லது நீதித்துறையின் அதிகாரம் மற்றும் பக்கசார்பின்மையின் பேணுகைக்குப் பங்கமாகவுள்ள கூற்றுக்களின் தொடர்பாடலிலிருந்தான பாதுகாப்பை உறுதிப்படுத்தலும்;
• இச்சட்டத்தின்கீழான தவறுகளைப் புரிவதற்காக நிகழ்நிலை கணக்குகள் மற்றும் தன்னியக்கச் செய்நிரல்களின் துர்ப்பிரயோகங்களுக்கு எதிராக அவற்றைக் கண்டுபிடிப்பதற்கான, தடுப்பதற்கான மற்றும் பேணிக்காப்பதற்கான  வழிமுறைகளை அறிமுகப்படுத்துதலும் ;  அத்துடன்  
• இலங்கையில் நிகழ்வு பற்றிய பொய்யான கூற்றுக்களை மீண்டும் மீண்டும்  அறிவிக்கின்ற நிகழ்நிலை அமைவிடங்களுக்கு நிதியளித்தல், அவற்றைமேம்படுத்தல் மற்றும் வேறு ஆதரவைத் தடுத்தலும் ஆகும்.
இச்சட்டத்தின் கீழ் குற்றங்கள் (பிரிவு 12 முதல் 25 வரை)
● இலங்கையில் நிகழ்வு பற்றிய பொய்யான கூற்றுக்களின் தொடர்பாடல்
● நீதிமன்ற அவமதிப்பாக அமைகின்ற பொய்யான அறிவிப்பு
● கலகம் விளைவிப்பதற்கு பொய்யான கூற்று மூலம் தேவையின்றி ஆத்திரமூட்டல்
● பொய்யான கூற்றொன்றின் மூலம் மதக் கூட்டமொன்றைக் குழப்புதல்
● மத உணர்வுகளைப் புண்படுத்த வேண்டும் என்ற திட்டமான உளக்கருத்துடன் பொய்யான கூற்றொன்றை அறிவித்தல்
● மத உணர்வுகளை நிந்திப்பதற்கு  பொய்யான கூற்றுக்கள் பற்றிய திட்டமானதும் வன்மமானதுமான தொடர்பாடல்
● நிகழ்நிலை அமைவிடமொன்றின் மூலம் ஏமாற்றுதல்
● ஆள்மாறாட்டஞ் செய்து ஏமாற்றுதல்
● சமாதானக் கேட்டை ஏற்படுத்தும் உளக்கருத்துடன் பொய்யான கூற்று மூலம் வேண்டுமென்று நிந்தை செய்தல்
● படைக் கலகத்தை அல்லது அரசுக்கெதிரான தவறொன்றை ஏற்படுத்தும் உளக்கருத்துடன் தவறான கூற்றென்றைப் பரப்புதல்
●  தொல்லை முதலியவற்றை ஏற்படுத்துவதற்கு நிகழ்வு பற்றிய கூற்றுக்களை அறிவித்தல்
● நிகழ்நிலை அமைவிடமொன்றின் மூலம் சிறுவர் துஷ்பிரயோகம்
● தவறொன்றைப் புரிவதற்குத் தன்னியக்கச் செய்நிரல்களை  ஆக்குதல் அல்லது மாற்றுதல்
இந்தக் குற்றங்களுக்கு, 5 ஆண்டுகள் மறியத் தண்டனைக்கு மற்றும்/அல்லது குற்றப்பணமொன்றுக்கு, அல்லது 3 ஆண்டுகள் மறியத் தண்டனைக்கு மற்றும்/அல்லது குற்றப்பணமொன்றுக்கு ஆளாகலாம். அனைத்து குற்றங்களும் பிடியாணையின்றிக் கைது செய்தகா மற்றும் பிணையிற் செல்தகு தவறாக  வேண்டும்.
பிரிவு 32 இன் படி, இலங்கையில் உள்ள இறுதிப் பயனர்களுக்கு மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தடைசெய்யப்பட்ட கூற்றுக்களைப் பரப்பும் எந்தவொரு தளத்தையும் வெளிப்படுத்தப்பட்ட நிகழ்நிலை அமைவிடங்களாக  நீதவான் நீதிமன்றம் பட்டியலிட முடியும்.
இங்கே, "நிகழ்நிலை அமைவிடம்" என்பது கணணி,  இணையம், இணையத்தளம், இணையப் பக்கம், உசாத்துணை இணையத்தளம் அல்லது அரங்கு  போன்ற பிற வழிவகைகளின் மீது தொகுத்தளிக்கப்படுவதும் இணைய வழிவகைகள் மூலம் பார்க்கப்படமுடியுமானதும் கேட்கப்படமுடியுமானதும் அல்லது வேறு வகையாக உய்த்தறியக்கூடியதுமானது என்று பொருள்படும்.
நிகழ்நிலை வெளியீட்டால்  இன்னலுற்ற ஆளுக்கு சட்டம் மூலம் கிடைக்கும் நிவாரணங்கள்:
இன்னலுற்ற ஆள் நிகழ்நிலைக் காப்பு ஆணைக்குழுவில் முறையீட்டினை  மேற்கொள்ளலாம். விசாரணைக்குப் பிறகு கேள்விக்குரிய கூற்று தடைசெய்யப்படலாம், மேலும் அத்தகைய கூற்றுக்கள் புழக்கத்தில் விடப்படுவதைத் தடுக்கலாம்.
உத்தரவைப் பெற்ற 24 மணி நேரத்தைப் பிந்தாமல், குற்றவாளி அறிவுறுத்தலுடன் இணங்கியொழுகுதல் வேண்டும். அந்த நபர் அவ்வாறு செய்யத் தவறினால்;
● அத்தகைய தடைசெய்யப்பட்ட கூற்றுக்கு இலங்கையில் உள்ள இறுதிப் பயனர்களின் அணுக்கத்தை இல்லாமலாக்கும்படி; அல்லது
● அத்தகைய நிகழ்நிலை அமைவிடத்திலிருந்து அத்தகைய இலங்கையில் தடைசெய்யப்பட்ட கூற்றை அகற்றும்படி
அறிவித்தலொன்று தொடர்புடைய இணைய அணுக்கச் சேவை வழங்குநர் அல்லது இணைய இடையீட்டாளருக்கு வழங்கப்படுதல் வேண்டும்.
தடைசெய்யப்பட்ட கூற்றுக்களின் தொடர்பாடலினால் இன்னலுற்ற எந்தவொரு ஆளும், அத்தகைய கூற்றுக்கள் புழக்கத்தில் விடப்படுவதைத் தடுப்பதற்கான கட்டளையொன்றைப் பெறுவதற்காக, மனு மற்றும் சத்தியக் கடதாசி மூலம் நீதவான் நீதிமன்றத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
தொடர்பாடல் தொடர்பாக சேவை வழங்குநர்களின் பொறுப்பு
பின்வரும் சேவைகளை வழங்குவதில் ஆளொருவர், சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட விதிகள் என்றவகையாக, ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட இயைபான செயன்முறைக் கோவைக்கு அமைந்தொழுகத் தவறுமிடத்தும், அதன் மூலம் வேறு எவரேனும் ஆளுக்கு முறைகேடான நட்டத்தை விளைவிக்கின்றவிடத்தும், அத்தகைய ஆள் நட்டத்தை உற்ற ஆளுக்கு நட்டஈடு என்ற வகையாக சேதவீடுகளைச் செலுத்துவதற்கு ஆளாதல் வேண்டும்:-
● ஓர் இணைய இடையீட்டாளர் சேவை
● ஒரு தொலைத்தொடர்பாடல் சேவை
● இணையத்திற்கான பகிரங்க அணுக்கத்தை ஒரு சேவை அல்லது
● ஒரு கணினி வளச் சேவை
போலியான நிகழ்நிலைக் கணக்குகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட மெய்யுறுதிப்படாத நடத்தையைத் தடுத்தல்
போலியான நிகழ்நிலைக் கணக்குகள் உருவாக்கப்படுவதையும், ஒழுங்கமைக்கப்பட்ட மெய்யுறுதிப்படாத நடத்தையைத் தடுக்க, அத்தகைய கணக்குகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இடைநிறுத்த இணைய இடையீட்டாளர்  சேவைக்கு அறிவிப்பதற்குணைக் குழுவுக்கு அதிகாரம் உள்ளது.
சமூக ஊடக தளங்களைப் பதிவுசெய்தல்
இலங்கையில் உள்ள சமூக ஊடக வலைத்தளங்கள் மற்றும் தளங்கள் பிரிவு 11 (ஓ) இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறையில் பதிவு செய்ய வேண்டும்.
நிகழ்நிலை அமைப்புகளின் பாதுகாப்பு ஆணைக்குழு (நிகழ்நிலைக் காப்பு ஆணைக்குழு)
இந்த ஆணைக்குழுவில் சனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆறு பேர் உள்ளனர்.
ஆணைக்குழுவின் அதிகாரங்கள்
● இந்த சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட கூற்றுக்களைத்  தொடர்பாடல் செய்யும் நபர்களுக்குப் பணிப்புரைகளை வழங்குதல்
● ஆட்கள், இணைய சேவை வழங்குநர்கள் அல்லது இணைய இடையீட்டாளர்களுக்குப் பணிப்புரைகளை வழங்குதல்
● சமூக ஊடக தளங்களை பதிவு செய்வது தொடர்பான பணிப்புரைகளை வழங்குதல்
● சமூக ஊடக தளங்களுக்கான நடத்தை நெறிமுறைகளை அறிமுகப்படுத்துதல்
● தடை செய்யப்பட்ட கூற்றுக்களை வெளியிடும் நிகழ்நிலைத் தளங்களை முடக்க இணைய சேவை வழங்குநர்கள் மற்றும் இணைய இடையீட்டாளர்களுக்கு அறிவித்தல்
சுதந்திரமான பேச்சு மற்றும் கருத்து வழங்கலுக்கான தாக்கங்கள்
● தடைசெய்யப்பட்ட கூற்றுக்கள் தொடர்பாக ஒரு சுயாதீனமற்ற ஆணைக்குழு தீர்ப்புகளை வழங்குவது மற்றும் அத்தகைய கூற்றுக்களை நிறுத்துவது குற்றமற்றவர் என்ற அனுமானத்தை சவால் செய்யலாம்.
● இந்த சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தடைசெய்யப்பட்ட கூற்றுக்களுக்கான குற்றங்கள் குறிப்பிடப்பட்டவை அல்ல, மேலும் அவை பரந்த பொருளைக் கொடுக்கலாம், இது கருத்து வெளியிடும் உரிமையைக் கட்டுப்படுத்தலாம்.
● சனாதிபதியால் நியமிக்கப்பட்ட மற்றும் சனாதிபதியால் நீக்கப்பட்ட ஒரு ஆணைக்குழுவிற்கு சுதந்திரம் இல்லை, அத்தகைய ஆணைக்குழுவின் தீர்மானங்கள் அரசியல் சார்ந்ததாக இருக்கலாம் மற்றும் குடிமக்களின் சுதந்திரமான கருத்துக்கு தடையாக இருக்கலாம்.
● சமூக ஊடக தளங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று சட்டமூலம் கூறுகிறது, இந்த சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை பின்பற்றாத சமூக ஊடக தளங்கள் நாட்டை விட்டு வெளியேறலாம். குடிமக்கள் கருத்து சுதந்திரத்தை இழக்க நேரிடும்.
● இலங்கை தொடர்பான வெளிநாட்டு அமைப்புகளின் ஊடாக மேற்கொள்ளப்படும் சில தன்னிய்க செய்நிரல் செயற்பாடுகளை தொழில்நுட்ப அடிப்படையில் இடைநிறுத்த முடியாது. அத்தகைய குற்றத்திற்கு இலங்கையின் குடிமக்கள் மட்டுமே பொறுப்புக் கூற முடியும்.
● ICCPR இன் பிரிவு 3 மற்றும் தண்டனைச் சட்டக் கோவையின் பிரிவு 120 ஆகியவற்றை தவறாகப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்ளும்போது, இந்த சட்டமூலத்தின்  விதிகள் கருத்து வேறுபாடுகளை அடக்குவதற்குப் பயன்படுத்தப்படும் அபாயம் அதிகமாகவுள்ளது.
சட்டமூலத்தின் நேர்மறையான அம்சங்கள்
● சட்டமூலத்தின் கீழ் குற்றங்களைப் புரியும் ஆட்கள் பிடியாண்மை மூலம் மட்டுமே கைது செய்யப்படுவார்கள்.
●சட்டமூலத்தின் கீழ் உள்ள அனைத்து குற்றங்களும் பிணையில் விடுதலை பெறக்கூடியவை.
● பொய்யான கூற்றுக்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.

புதியது பழையவை