சாந்தன் உயிரிழந்தமை தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றில் நேற்று (04-03-2024) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முனியப்பராஜ் முன்னிலையாகி, மறைந்த சாந்தனின் உடல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான விபரங்களையும் தாக்கல் செய்தார்.
இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கை முடித்து வைக்க உத்தரவிடுவதாக கூறினார்.
இலங்கைக்கு அனுப்ப தமிழக அரசு தயார்
அப்போது, குறுக்கிட்ட வழக்கறிஞர் முனியப்பராஜ், “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகிய மூவரும் திருச்சி சிறப்பு முகாமில் இருக்கின்றனர். அவர்கள் தங்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விண்ணப்பித்து உள்ளனர். அவர்கள் மூவரையும் இலங்கைக்கு அனுப்ப தமிழக அரசு தயாராக இருக்கிறது.
எனவே, அவர்களை இலங்கை அனுப்புவதற்கான அனுமதியை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது
இதனை கேட்ட நீதிபதி, ‘இந்த வழக்கில் மூன்று பேர் தொடர்பான எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. ஆனால், அதே நேரத்தில், அவர்கள் மூன்று பேரும் தனித் தனியாக மனுத்தாக்கல் செய்தால் அந்த மனு பரிசீலிக்கப்படும்’ என்று தெரிவித்தார்.