‘மாற்று பராமரிப்பு மற்றும் அதற்கான குடும்பங்களை வலுப்படுத்தல்’ திட்டத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுல்படுத்துவது
தொடர்பாகத் தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்ரினா முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் சிறுவர் பராமரிப்பு மற்றும் மாற்றுப் பராமரிப்பு நிலை தொடர்பாக சிறுவர் பாதுகாப்பு நன்னடத்தை திணைக்களத்தின்
கிழக்கு மாகாண ஆணையாளர் ரிஸ்வானி ரிபாஸ் தெளிவுபடுத்தி மாவட்டத்தில் காணப்படும் சிறுவர் பராமரிப்பின் நிலை மற்றும்
நடைமுறைச் சவால்கள் குறித்து விளக்கமளித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் ஐக்கிய நாடுகள் சிறுவர் பாதுகாப்பு அமைப்பும் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக் காலமாக சிறுவர் பாதுகாப்பு
இல்லங்களுக்கு வரும் பிள்ளைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான வேலைத்திட்டமாக இம்மாற்றுப் பராமரிப்பு மற்றும் அதற்கான குடும்பங்களை வலுப்படுத்தல்
திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.
நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன், மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ரி.மதிராஜ், மாவட்ட உள சமூக இரணப்பாளர் பிரபாகர்,
மாவட்ட செயலக அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், பொலிஸ் மற்றும் மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் பணியாற்றும்
சிறுவர் உரிமை மேம்பாடு, சிறுவர் நன்னடத்தை, முன் பள்ளி அபிவிருத்தி ஆகிய துறைசார் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.