இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு நற்செய்தி



இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் விமான நிலையத்திலிருந்து வெளியில் வரும்போதே சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுமென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(22-03-2024) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய வீதி விபத்துக்களை மட்டுப்படுத்தும் வகையிலான பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. வீதி விபத்துக்களால் பாதிக்கப்படுபவர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் அறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கும் காப்புறுதி நிறுவனங்களுக்கும் இடையில் இடம்பெற்ற தொடர் கலந்துரையாடலின் பலனாக நீதிமன்ற நடவடிக்கையின்றி விரைவாக இழப்பீடு வழங்கும் வேலைத் திட்டம் மார்ச் 1 ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. மார்ச் 1 ஆம் திகதிக்கு பின்னரான விபத்துக்கள் தொடர்பில் மாத்திரமே இத்திட்டம் செயற்படுத்தப்படும்.

விபத்து இடம்பெற்று ஒரு வருடத்திற்குள் சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவனத்திற்கு விண்ணப்பிப்பதன் மூலம், நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள காப்புறுதி நிறுவனத்தின் எந்தவொரு கிளையிலிருந்தும் அதிகபட்சமாக 05 இலட்சம் ரூபா வரையான இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொள்ள முடியும்.

மாறாக பாதிக்கப்பட்டவர் மேலதிகமான இழப்பீட்டுத் தொகையை பெற எதிர்பார்க்கும் பட்சத்தில் அவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை நாட வேண்டும்.

இந்த நடவடிக்கை குறித்து இலங்கை பொலிஸார் மற்றும் பிரதேச செயலாளர்கள் கிராம சேவை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குடிவரவுத் திணைக்களம், விமானப் போக்குவரத்து சேவைகள் அதிகார சபை மற்றும் சுற்றுலா அமைச்சு ஆகியன இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் விமான நிலையத்தில் விண்ணப்பிப்பதற்கும் சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

அதன்படி மாதமொன்றுக்கான சாரதி அனுமதி பத்திரங்களுக்கு 25 டொலர்களும், மூன்று மாதங்களுக்கான சாரதி அனுமதி பத்திரங்களுக்கு 50 டொலர்களும், 6 மாதங்களுக்கு 75 டொலர்களும், ஒரு வருடத்திற்கு மேலான அனுமதி பத்திரங்களுக்கு 200 டொலர்களும் அறவிடப்படவுள்ளது.

மேலும், ஏப்ரல் 10 முதல் திறன் மதிப்பீட்டு புள்ளிகள் வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் வரையில், போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதம் செலுத்தும் தபால் நிலையங்கள், குற்றத்தின் தன்மை, உரிய பொலிஸ் நிலையம், சாரதி அனுமதிப் பத்திர விவரம் மற்றும் தொலைபேசி இலக்கம் உள்ளிட்ட தகவல்கள் தேசிய வீதி போக்குவரத்து அதிகார சபையின் தகவல் கட்டமைப்பின் இணைக்கப்படவுள்ளன.

அந்த தரவுகளின்படி, விபத்து குறித்த குறுஞ்செய்தி மற்றும் விபத்து தொடர்பான காணொளிகள் தேசிய வீதி போக்குவரத்து பாதுகாப்பு அதிகார சபையினால் உரிய தொலைபேசி இலக்கங்களுக்கு வட்ஸ் அப் மூலம் அனுப்பப்படும்.

வீதி விபத்துகளைக் குறைப்பதற்கான விழிப்புணர்வு பாடசாலை மட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். அதன்படி, கல்வி அமைச்சு, போக்குவரத்து அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவை இணைந்து ஏப்ரல் 3ஆம் திகதி முதல் ஒவ்வொரு பாடசாலைகளிலும் வீதி பாதுகாப்பு ஒன்றியங்களை நிறுவ தீர்மானிக்கப்பட்டளது. பல்வேறு படிமுறைகளின் கீழ் இத்திட்டத்திற்காக பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி பதக்கம் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜனாதிபதி பதக்கம் வெள்வோர் சாரதி அனுமதி பத்திரத்திற்கான எழுத்துமூல பரீட்சையிலிருந்து விடுவிக்கப்படுவர். கல்வியற் கல்லூரிகளிலும் வீதி போக்குவரத்து தொடர்பிலான ஒன்றியங்களை நிறுவி மேற்கூறியது போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்கவும் எதிர்பார்த்திருக்கிறோம்.

அதற்கு மேலதிகமாக வீதி விதிமுறைகள் மற்றும் வீதி போக்குவரத்து தொடர்பிலான அறிவை பாலர் பாடசாலை மட்டத்தில் பெற்றுகொடுப்பதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

தேசிய வீதிப் போக்குவரத்து அதிகார சபை 1998 இல் நிறுவப்பட்டது. தற்போதைய நிலைமைகளுக்கமைய அதற்காக ஏற்பாடுகளை செய்ய முடியாது என்பதால் தேசிய வீதிப் போக்குவரத்து அதிகார சபையை வீதிப் போக்குவரத்து ஆணைக்குழுவாக மாற்றியமைப்பதற்கான அங்கீகாரத்தை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கொண்டுள்ளார். அதனை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்பித்து நிறைவேற்றிக்கொள்ளவும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதியது பழையவை