கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது சாந்தனின் உடல்
சாந்தனின் உடலைத் தாங்கி விமானம் சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. 

அங்கிருக்கும் எமது செய்தியாளர் இதனை உறுதிப்படுத்தினார். 

நேரம் -  11:50


இதன் பின்னர் சாந்தனின் உடல் கொழும்பில் இருந்து தரைவழியாக யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாந்தனின் உடல் யாழ்ப்பாணத்தை சென்றடைந்ததும், அங்குள்ள தனியார் மலர்சாலையில் அவரது பூதவுடல் வைக்கப்படவுள்ளதாகவும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை உடுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், சாந்தனின் இறுதிகிரியைகள் தொடர்பான தகவல்கள் குறித்து இதுவரை எதுவும் தெரியவிக்கப்படவில்லை.

முதலாம் இணைப்பு


முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டு உடல் நலக் குறைவால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தனின் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்படுவதில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலை 09.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் சென்னையில் இருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அவரது உடல் அனுப்பி வைக்கப்படும் என்று இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.


எனினும்,  காலை 10 மணிக்குப் பிறகுதான் சாந்தனின் பூதவுடல் தாங்கிய விமானம் இலங்கைக்கு புறப்படவுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதியது பழையவை