மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதா ததேயு திருத்தல பங்கு மக்களால் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது!




உலகை உய்விக்க வந்த இயேசு பிரான் கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்ந்து அந் நாளை உலக வாழ் கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி அல்லது ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி என்று இயேசு கிறித்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்றனர் பெரிய வெள்ளியின் ஒரு அம்சமாக சிலுவைப் பாதை எனும் ஊர்வல நிகழ்வு நிகழ்த்தப்படுகிறது.

அந்த வரிசையிலே மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதா ததேயு திருத்தலத்திலும் ஒவ்வொரு வருடமும் பெரிய வெள்ளி நாள் கொண்டாடப்பட்டுவருவதுடன் அதனோடு இணைந்த சிலுவைப் பாதை ஊர்வலமும் உணர்வுபூர்வமாக நிகழ்த்தப்பட்டு வருகிறது.




அந்தவகையில் இவ் வருடமும் நூற்றுக்கணக்கான பங்கு மக்களின் பங்குபற்றுதலுடன் இன்று (29-03-2024)காலை குருக்கள்மடம் கிறிஸ்தவ திருத்தலத்தில் இருந்து தேற்றாத்தீவு புனித யூதா ததேயூ திருத்தலம் வரை சிலுவையை சுமந்த வண்ணம் ஊர்வலமாக மக்கள் வருகை தந்ததை அவதானிக்க முடிந்தது.

பெரிய வெள்ளிக் கிழமையன்று கிறித்தவர்கள் கொண்டாடுகின்ற முக்கிய நிகழ்வான சிலுவைப் பாதை ஊர்வலமானது பொதுமக்கள் விரும்பி நடத்துகின்ற ஒரு இறைவேண்டல் கொண்டாட்டமாகவே பார்க்க முடிந்தது. 

தவக் காலத்தின் வெள்ளிக் கிழமைகளிலும், அதிலும் சிறப்பாகப் பெரிய வெள்ளிக் கிழமையில் சிலுவைப் பாதைக் கொண்டாட்டம் தனிப் பொருள் வாய்ந்ததாகத் திகழ்கின்றது. 

ஏனென்றால் இயேசு அனுபவித்த துன்பங்களோடு மக்கள் தங்களையே ஒன்றுபடுத்திக்கொண்டு, தாங்கள் கடவுளுக்கும் பிறருக்கும் எதிராக நடப்பதே இயேசு துன்புற்றுச் சாவதற்குக் காரணம் என்பதை உணர்ந்து, மனத் துயர் கொண்டு, இனிமேல் நல்ல வாழ்க்கை வாழ்வதற்குக் கடவுளின் அருளை இறைஞ்சுகின்ற வாய்ப்பாக சிலுவைப் பாதை அமைகின்றது. அதோடு இயேசு சிலுவையில் அறையுண்டு உயிர்நீத்த நிகழ்ச்சியை சிலுவைப் பாதை நினைவுகூர்கின்றது. 

இன்று(29-03-2024) முன்னெடுக்கப்பட்ட சிலுவைப் பாதையின் போது பல நிலைகளில்  தியானச் சிந்தனைகள் சொல்லப்பட்டு பாடல்கள் பாடப்பட்டு மக்கள் இயேசுவை வேண்டி வழிபாடுகளிலும் ஈடுபட்டுசென்றதை அவதானிக்க முடிந்தது.

இந்து மற்றும் கிறிஸ்தவ மக்கள்  ஒற்றுமையாக வாழும் கிராமங்களில் அமைந்துள்ள இவ் தேவாலயங்களால் முன்னெடுக்கப்படும் வழிபாடுகளை இந்து மக்களும் பார்வையிட்டிருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது

தேற்றாத்தீவு புனித யூதா ததேயு திருத்தலத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை உயிர்த்த ஞாயிறு ஆராதனைகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



புதியது பழையவை