குடும்ப வன்முறைகளைத் தீர்ப்பதற்கு புதிய சட்டமூலம்- அமைச்சரவை அனுமதி!




நாட்டில் தற்போதுள்ள குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டமூலமொன்றை பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதுடன், அது வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.


அதனை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கவிருப்பதோடு, தேசிய மகளிர் ஆணைக்குழு அமைப்பதற்கான நியதிகளும் அதற்குள் உள்வாங்கப்பட்டுள்ளன.
பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியமும் பாராளுமன்றத்தில் பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலம் தொடர்பான கலந்துரையாடலை நடத்தியிருந்தது.

ஜனாதிபதி அலுவலகம், சட்டமா அதிபர் திணைக்களம், சட்ட வரைஞர் திணைக்களம் உள்ளிட்ட தரப்பினரும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.

பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலம் தொடர்பில் உலக வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகள் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதோடு, ஒரு வாரத்திற்குள் அந்த அவதானிப்புகளை பரிசீலிக்க இலங்கையின் மகளிர் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

அதில் திருத்தங்கள் இருக்கும் பட்சத்தில் மீண்டும் வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்பிக்க பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் சார்பில் அவருக்கு நெருக்கமான ஒருவர் வழக்குப் பதிவு செய்வதற்கான வாய்ப்பு உள்ளிட்ட பல முக்கிய விடயங்களும் புதிய சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பதோடு, நடைமுறையிலிருக்கும் குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டமாக பாராளுமன்றத்தில் சமர்பிக்கவும் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக கூறினார்.
புதியது பழையவை