மதில் சுவர் இடிந்து வீழ்ந்து சிறுமி உட்பட நால்வர் உயிரிழப்பு!மயான மதில் சுவர் இடிந்து விழுந்ததில் 11 வயது சிறுமி ஒருவர் உட்பட நால்வர் உயிரிழந்த காணொளி வெளியாகி நெஞ்சை பதற வைத்துள்ளது.

இந்தியாவின் ஹரியாணா மாநிலம் குருகிராம் அருகே அர்ஜுன் நகர் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தப் பகுதியில் எரியூட்டு மயானம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனைச் சுற்றிலும் மதில் சுவர் கட்டப்பட்டுள்ளது. மயானத்தில் சடலங்களை எரிப்பதற்காக பயன்படுத்தப்படும் மரக்கட்டைகள் மதில் அருகே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

திடீரென சரிந்து விழுந்த மதில் சுவர்
இந்த நிலையில் நேற்று மாலை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் சுற்றுச்சுவர் அருகே அமர்ந்திருந்தனர். அப்போது திடீரென மதில் சுவர் சரிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 11 வயதான சிறுமி, உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


இதனால் பதறிய அருகில் இருந்தவர்கள் உடனடியாக இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கி இருந்த நால்வரது உடல்களையும் மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதில் படுகாயம் அடைந்த ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மரக்கட்டைகளின் பாரம் காரணமாக
அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரக்கட்டைகளின் பாரம் காரணமாக மதில் சுவர் இடிந்து விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


இதனிடையே மதில் சுவர் இடிந்து விழுந்து நான்கு பேர் உயிரிழக்கும் பதைபதைக்க வைக்கும் காணொளி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
புதியது பழையவை