பாசிக்குடா கடற்கரையில் அநீதியான முறையில் பணம் அறவீடு



மட்டக்களப்பு  பாசிக்குடா கடற்கரை வளாகத்தில் அநீதியான முறையில் கட்டணம் அறவிடப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். 

வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாசிக்குடா  கடற்கரைக்கு சுற்றுலா பயணிகளாகவும், உடற்பயிற்சிக்காகவும், பொழுதுபோக்கவும் மற்றும் குளிக்கவும் என பல்வேறு விடயங்களுக்காக உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் தமது விடுமுறை நாட்களில் வருகை தருகின்றனர்.

இருப்பினும், குறித்த கடற்கரையை அடைவதற்கு இடிபாடுள்ள, குழியும் பள்ளமும் நிறைந்த, கரடுமுரடான பாதையொன்றே காணப்படுகின்றது. 


மேலும், கடற்கரையை சென்றடைவதற்குள் நான்கு மர்ம நபர்கள், பற்றுச்சீட்டு ஒன்றை வலுக்கட்டாயமாக கொடுத்து சுற்றுலாப் பயணிகள் இடமிருந்து பணம் பெறுவதாக கூறப்படுகின்றது.



அதேநேரம், பற்றுச்சீட்டில் திகதி, வாகன இலக்கம் என எதுவும் இருக்காது எனவும் குறைந்த பட்சம் அதனை யார் தருகிறார்கள் என்று அறிந்து கொள்வதற்கு உத்தியோகபூர்வ சீல் கையொப்பம் கூட இருக்காது எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 


இருப்பினும் குறித்த பற்றுச்சீட்டில் மேலேயும், கீழேயும் "கோறளைப்பற்று பிரதேச சபை" என எழுதப்பட்டிருப்பதாகவும் வாகன பாதுகாப்போ, வாகன நிறுத்துமிட ஒழுங்கமைப்போ அல்லது வாகனத்தை எடுப்பதற்கான எவ்வித ஒத்துழைப்போ கட்டணம் அறவிடுபவர்களிடம் இருந்து சுற்றுலாப் பயணிகளுக்குக் கிடைப்பதில்லை.


இந்நிலையில், குறித்த பற்றுச்சீட்டை வழங்குவது யார்? 

குறித்த கட்டணத்தை பயணிகளிடம் அறவிடுவற்கு இவர்களுக்கு அதிகாரத்தை வழங்கியது யார்?

அறவிடப்படும் பணம் எங்கே செல்கின்றது? 

தனியார் ஒருவர் குறித்த பற்றுச்சீட்டை வழங்குவாராயின் குறித்த பிரதேச சபையின் பெயரினை எவ்வாறு பற்றுச்சீட்டில் பயன்படுத்த முடியும்?

போன்ற கேள்விகள் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. 


அதேவேளை, இயற்கையை இரசிக்க வருபவர்களிடம் அநீதியான முறையில் பணத்தை பெறும் பிரதேச சபை, கடற்கரைக்கு செல்லும் பாதையை போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் ஏன் மக்களுக்காக புணரமைத்து அபிவிருத்தி செய்து தரமுடியாது எனவும் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம். ராசிக் கேள்வி எழுப்பியுள்ளார்.


மேலும், வாழைச்சேனை பிரதேச சபை இந்த விடயத்தில் பராமுகமாக நடந்து கொள்வதாக பொதுமக்கள் பலரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
புதியது பழையவை