நாட்டின் இன்றைய வானிலை முன்னறிவிப்பு!



தென்மேல் பருவப்பெயர்ச்சியின் காரணமாக நிலவுகின்ற காற்றும் மழையுடனான வானிலையையும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய, சப்ரகமுவ, மேல்,வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் நுவரேலியா மாவட்டத்தின் சில இடங்களிலும் சுமார் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, காலி மற்றும்  மாத்தறை  மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 mm வரையிலான ஓரளவு  பலத்த மழை பெய்யலாம் எனவும்  எதிர்பார்க்கப்படுகிறது.  

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். 

கிழக்கு மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். 

மத்திய மலைப்பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும்  தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும்    மணித்தியாலத்திற்கு சுமார் 50 ‐ 60 km வேகத்தில் அடிக்கடி  பலத்த காற்று வீசக்கூடும்.

 நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மணித்தியாலத்திற்கு சுமார்  30 ‐ 40 km வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் 

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் தென்கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியின் மத்தியுடன் இணைந்ததாக உருவாகிய ஒரு தாழ் அமுக்க நிலையானது நேற்றையளவில் மிக வலுவான தாழ் அமுக்கமாக மாற்றமடைந்து பின்னர் சூறாவளியாக வலுவடைந்து மணித்தியாலத்திற்கு 12 km வேகத்தில் வட திசையை நோக்கி நகர்கிறது. 

இந்த சூறாவளிக்கு ஓமான் நாட்டினால் முன்மொழியப்பட்ட  "றீமல்" என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த  "றீமல்" புயலானது மேலும் தீவிரமடைந்து மிகவும் சக்திமிக்க சூறாவளியாக மாற்றமடைந்து இன்று நள்ளிரவளவில் வங்காள தேசத்திற்கும் அதனை சூழ உள்ள மேற்கு வங்காள கரையோரப் பிரதேசத்திற்கும் இடையாக ஊடறுத்து செல்லக்கூடும். 

இதன் காரணமாக இலங்கைக்கு நேரடியாக எந்தவித தாக்கங்களும் இல்லாத போதிலும் காற்றும் மழையுடனான வானிலையும் ஓரளவு அதிகரித்துக் காணப்படும். 

மன்னார் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். 

காங்கேசன்துறை  தொடக்கம் மன்னார்,  கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 50 km வேகத்தில் காற்று வீசும். சில சமயங்களில் மணித்தியாலத்திற்கு 60 ‐ 70 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்தும் காணப்படும். 

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 ‐ 40 km வேகத்தில் காற்று வீசும். சில சமயங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 ‐ 60  km ஆக அதிகரித்தும் காணப்படும். 

காங்கேசன்துறை  தொடக்கம் மன்னார்,  கொழும்பு,  காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்கள் அடிக்கடி மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். ஆனபடியினால் இக் கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். 

நாட்டை சூழ உள்ள ஏனைய  கடல் பிராந்தியங்கள் அடிக்கடி கொந்தளிப்பாகக் காணப்படுவதனால் இக் கடல் பிராந்தியங்களில் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

காங்கேசன்துறை   தொடக்கம் மன்னார்,  கல்பிட்டி,  கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான  கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2.5 ‐ 3.0 m உயரத்திற்கு மேலெளக்கூடும். இது தரைப் பிரதேசத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது. 

 கலாநிதி மொஹமட் சாலிஹீன்,  
சிரேஸ்ட  வானிலை அதிகாரி.
புதியது பழையவை