யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றில் பாடசாலை மாணவிகளை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கற்பிக்கும் 42 வயதான ஆசிரியர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாடசாலை விடுமுறை காலப்பகுதியிலும், விரைவில் பரீட்சையொன்றை எதிர்கொள்ளவுள்ள மாணவர்களுக்கு அந்த பாடசாலையில் விசேட வகுப்புக்களை அந்த ஆசிரியர் நடத்தி வந்துள்ளார். இதன்போது, பாடசாலை மாணவிகளுடன் அவர் அத்துமீறி நடந்து கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவியொருவர் தனது பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்ததையடுத்து, மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டார்.
இதை தொடர்ந்து பாடசாலை ஆசிரியரை, மானிப்பாய் பொலிசார் கைது செய்தனர். ஆசிரியர் தம்முடனும் தவறாக நடக்க முற்பட்டதாக அந்த வகுப்பிலுள்ள மேலும் சில மாணவிகள் பொலிஸ் விசாரணையில் வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆசிரியர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதை தொடர்ந்து, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
க.பொ.த சாதாரணதர பரீட்சை நிலையமாக செயற்பட்ட பாடசாலையில், மேலதிக வகுப்புக்கள் நடத்தப்பட்ட நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கள் வெளியாகியுள்ளன.