“காக்காண்ணை”, என்று அறியப்பட்ட முத்துக்குமார் மனோகர் ஆகிய நான் மாவீரர் அறிவிழியின் தந்தை. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் போட்டியிட வேண்டிய அவசியம் பற்றிப் போதுமானளவு விடயங்கள் மக்களிடம் முன்வைக்கப்பட்டாயிற்று. எனவே, மேற்கொண்டு ஆற்றவேண்டிய விடயங்கள் தொடர்பாக சிலவற்றை மக்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.
தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை இறுக்கமாகப் பற்றிக் கொண்டதால் மாவீரரான எமது செல்வங்களின் குடும்பத்தினரும், முன்னாள் போராளிகள் குடும்பத்தினரும், எப்போதும் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு உறுதுணையாக எமது மக்களும் தமிழ்ப் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனின் சின்னமான சங்குக்கு வாக்களிக்கத் தவறாதீர்கள். இதனை உங்கள் தேசியக் கடமையாக உளமார ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள், உறவினர், நண்பர்களிடமும் இத்தேவையை உணர்த்துங்கள்.
இறுதியுத்தம் முடிந்து 15 வருடங்களாகிவிட்டது. பேச்சுவார்த்தை, பேசுதல் என்பவற்றை தொடர்ந்து கேட்டு காது புளித்துப்போய்விட்டது. தமிழரின் ஆறாம் அறிவைக் கேள்விக்குட்படுத்தும் விதத்தில் புதுப்புது விளக்கங்களைக் கேட்டாயிற்று. எனவே, நாம் இனி அடுத்த கட்டத்தை ஜனநாயக வழியில் மேற்கொள்வோம். புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள எமது உறவுகள் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு தவறாமல் வாக்களிக்கும்படி தமது குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுக்கு அறிவுறுத்துங்கள். பொது வேட்பாளர் குறித்த விடயத்துக்கு சாத்தியமான - எவ்வகையில் உதவ - பங்காற்ற முடியுமோ அந்த வகையில் பங்காற்றுங்கள்.
திரு. பா. அரியநேத்திரன் 1984ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் அவரது சொந்தக் கிராமமான அம்பிளாந்துறையில் எனக்கு அறிமுகமானவர். போராட்டப் பங்களிப்பு என்பதற்கு மேலாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம் தொடர்பான விடயங்களில் இவரது ஈடுபாட்டை நான் அறிவேன். அதனாலேயே, 2004 பொதுத் தேர்தலில் போட்டியிடத் தேர்வானவர்களில் ஒருவராக இவரது பெயர் கிளிநொச்சியிலிருந்து அறிவிக்கப்பட்டது. இறுதி யுத்தத்தின் பின்னர் நெருக்கடிகளின் மத்தியிலும் மாவீரர் நினைவேந்தல்களை எப்படியோ தொடர்ச்சியாகச் செய்து வந்தவர்.
***
தமிழ்த் தேசியம் என்பதை வெறும் எதிர்ப்பரசியல் என்று கொச்சைப்படுத்தியவர்களும் உண்டு. ஆனால், எம்மை யார் என உணரவைத்து உணர்வோட்டத்தில் ஒன்றிக்கலக்க வைத்த விடயம் இது. இராஜதுரை வடக்குக்கு வருகிறார் என்றால் அவரது அழகு தமிழ் உரையைக் கேட்பதற்கு எத்தனை மைல் தூரமானாலும் துவிச்சக்கரவண்டியில் பயணிக்கும் அன்றைய இளைஞர்களை நான் சிறுவயதில் கண்டிருக்கிறேன். அன்றைய தமிழ் இளைஞர் பேரவை காலத்தில் பாசி என்றழைக்கப்பட்ட பாலிப்போடி சின்னத்துரையும் (அடுத்த கட்டபோராட்டத்தில் அவரது பெயர் யோகன் பாதர் - முள்ளிவாய்க்கால் வரை பயணித்தவர்) இன்னொருவரும் காசி ஆனந்தனின் பிறந்தநாளைக் கொண்டாட ஏற்பாடு செய்திருந்தனர். தந்தை செல்வாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர் தனியாக தனது பயணப் பொதியுடன் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் வந்திறங்கினார். அவரைக் கண்டதும் இவர்கள் இருவரும் விழா நிகழ்ச்சி நிரலைக் குறிப்பிடும் துண்டுப் பிரசுரம் ஒன்றை வழங்கினர். அதனை வாசித்த தந்தையிடமிருருந்து ஒற்றை வரியிலான கேள்வி எழுந்தது. “இதில் இராஜதுரையின் பெயர் இல்லையே?” - அவ்வளவுதான் தான் ஏற்கனவே தங்கத் தீர்மானித்த இடத்துக்கு அவர் போய்விட்டார். குறிப்பிட்ட நிகழ்வில் பங்கேற்கவில்லை. அன்று மாலை கொழும்பு புறப்படும் தபால் புகையிரதத்தில் அவர் திரும்பிவிட்டார்.
அவர் சொல்லாமலே உணர்த்திய விடயம் இதுதான் “தமிழ்த் தேசியத்துக்காக உழைத்த மூத்தவர்களை மதிக்காத செயலை நான் ஏற்கமாட்டேன்”, என்பது. இவ்வாறான தலைமைத்துவப் பண்புதான் தமிழ்த் தேசியத்தின் அடிநாதம். அதனால்தான் தந்தை செல்வாவின் நினைவுத்தூபியில் தமிழரின் சகல மாவட்டத்தின் மண்ணும் ஒன்றிக்கலக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த வேண்டுகோளை ஏற்று கிழக்கு மாகாணம் அன்னமலையிலிருந்து உழவு இயந்திரப் பெட்டியில் மண் கொண்டுவந்தனர் அந்த ஊர் மக்கள். வெறுமனே ஓர் அரசியல் கட்சியின் தலைவர் என்று தந்தை செல்வாவைப் பார்க்கவில்லை வட- கிழக்கு மக்கள் என்பதற்கு இது ஓர் உதாரணம்.
தமிழ்த் தேசியத்தை ஓர் அஞ்சலோட்டமாக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொண்டு செல்கின்றனர். எல்லா நெருக்கடியான காலங்களிலும் அடுத்தடுத்த தொகுதியினரிடம் இந்த உணர்வைக் கடத்துகின்றனர். கடந்த 15ஆம் திகதி (வியாழக்கிழமை) தொழில்நுட்ப உதவியாளராக சூறாவளி வீசிய காலத்தில் மட்டக்களப்பில் பணியாற்றிய ப. திருக்கேதீஸ்வரன் அவர்கள் வெளியிட்ட 'புழுதிக்கதைகள்' என்ற நூலின் வெளியீடு இடம்பெற்றது. அதில், சேதமடைந்த மன்னம்பிட்டி பாலத்தை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் திருத்த உதவினர் என்ற விடயத்தைக் குறிப்பிட்டார். பின்னர், தேசியம் சார்ந்த எந்த நிகழ்விலும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்றே வந்துள்ளனர். “அங்கையிருந்து இஞ்சைவந்து...” என்று அவர்களின் பங்களிப்பை கொச்சைப்படுத்தினார் சாணக்கியன்.
இரா. பரமதேவாவின் காலத்தில் மட்டக்களப்பில் நடைபெற்ற மாணவர் போராட்டங்களில் தியாகி சிவகுமாரனும் சத்தியசீலனும் கலந்துகொண்டனர் என்ற வரலாறு இவருக்குத் தெரிந்திருக்காது. ஏனெனில், அப்போது இவர் பிறந்திருக்கவில்லை. இவரும் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு எதிராக விஷத்தைக் கக்குகிறார். 2004இலேயே அரியநேத்திரனின் பங்கு எத்தகையதாக இருந்தது என்பதை தமிழ் அரசின் தலைவரும் துணைத் தலைவரும் சொல்லிக்கொடுக்கத் தவறிவிட்டனர்.
சம்பந்தன் ஐயாவுக்கு வயதாகிவிட்டது. அவர் பதவி விலகி அடுத்தவர்களுக்கு வழிவிட வேண்டும் என அமைப்பின் அங்கீகாரமின்றி சுமந்திரன் சொன்னபோது அவர்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தவறியவர்கள் மூத்தவர்கள் தொடர்பாக (சிறீநேசன்) முறையற்ற விதத்தில் ஒருமையில் வார்த்தைப் பிரயோகங்கள் மேற்கொண்டபோது ஒழுங்கைப் பேணாதவர்கள் தந்தை செல்வாவின் அமைப்பின் பெயரால் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தகுதியற்றவர்கள் - அமைப்பின் பெயரால் சுமந்திரன் தன்னிச்சையாக மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாக இதுவரை ஏழுக்கும் மேற்பட்ட தடவைகள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். 1989 தேர்தலில் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன், ஆனந்தசங்கரி, யோகேஸ்வரன், போன்ற பிரபலங்களை தோற்கடித்தவர்கள் எமது மக்கள். ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகள் பெற்ற ஒருவரை இன்றுவரை வாக்களிப்பு மூலம் தெரிவு செய்யாதவர்கள் எமது மக்கள் என்பதை சாணக்கியனும் உணர்ந்து கொள்ளவேண்டும். மேய்ச்சல் தரை விவகாரத்தில் “மாடுகளுக்கு புல்லு வெட்டிப் போட முடியாதா?” என ஜனாதிபதி தன்னிடம் கேட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சாணக்கியன் சொன்னார். இதன் அர்த்தம் “மேய்ச்சல் தரையை ஆக்கிரமித்தவர்களை அகற்ற நான் தயாரில்லை”, என்பதுதான். இப்போது ஜனாதிபதி பேச்சுக்கு அழைக்கிறார் என்றால் நாளாந்தம் எத்தனை தொன் புல்லுத் தர ஆயத்தமாக இருக்கிறார் என்றுதான் கேட்க முடியுமே தவிர, எப்போது இவர்களை அகற்றப்போகிறார் என்று பேச முடியாது.
மேய்ச்சல்தரை விவகாரத்தில் 24 மணி நேரத்துக்குள் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அகற்றப்பட்ட மாவட்டச் செயலர் திருமதி கலாமதி பத்மராஜா கண்ணீருடன் தன்னை அனுப்பி வைத்த மாவட்ட செயலக ஊழியர்களிடம் சொன்ன வார்த்தைகளை சாணக்கியனுக்கு நினைவூட்டுகிறோம். “சோர்ந்து போகாதீர்கள்! சோரம் போகாதீர்கள்...!”
* * *
எல்லாவிதத் தடைகளையும் துரோகங்களையும் தாண்டி தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தில் முன்னோக்கிச் செல்வோம். புலம்பெயர் உறவுகளும் தாயகத்திலுள்ளோரும் கைகோர்த்து இதனை சாத்தியமாக்குவோம்.