இலங்கை ஜனநாயகம் என்பது இதுவரை மக்களுக்கான ஜனநாயகம் ஆகவில்லை. அது இனநாயகமாவும் சக்திமிக்க தலைவர்களின் தன்னல நாயகமாகவும் மாறிக் கொண்டிருக்கிறது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று (07-08-2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், ”நாட்டை ஆளுகின்ற தலைவர்கள் மக்கள் ஜனநாயகத்தை தத்தமக்கு வேண்டிய தனிப்பட்ட நபர்களுக்கான ஜனநாயகமாக மாற்றிக் கொண்டு வருகின்றார்கள்.
தற்போது ஜனாதிபதி ரணில் எந்தத் தேர்தலை நடாத்த வேண்டும் என்பதை தனது சுயநல நோக்கில்தான் கையாளுகின்றார்.
இதே போன்று தான் ராஜபக்ச குடும்பத்தினரும் அவர்களது காலத்தில் ஜனநாயகத்தையும் சட்டங்களையும் தமக்கு சாதகமாக்கி கொண்டு வந்தனர்.
ஜனாதிபதி ரணில் தேர்தலை நடாத்தாமல் மக்கள் தீர்ப்பு
நடாத்தவும் சிந்தித்தார். அதாவது தான் (ரணில்) மீண்டும் 5 வருடங்கள் ஜனாதிபதியாக பதவியில் இருப்பதை விரும்புகின்றீர்களா? என்பதாக அத்தேர்தல் அமையும். ஆமென 50 வீதத்திலும் அதிகமானவர்கள் வாக்களித்தால், தனது பதவியைத் தொடரலாம் என்று ரணில் கருதினார்.
இத்தகைய மக்கள் தீர்ப்பை ரணிலின் மாமனாரான ஜெயவர்தனா 1982 இல் நாடாளுமன்றப் பதவி நீடிப்புக்காக செய்திருந்தார். இதன் மூலமாக ஏனைய வேட்பாளர்கள் போட்டியிடுவதைத் தடுத்து விட்டுத் தான் வென்று விடலாம் என்று ரணில் சிந்தித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர்
இது இவ்வாறிருக்க, ஜனாதிபதி ரணில் உடனடியாக ஜனாதிபதி வேட்பாளருக்கான கட்டுப் பணத்தைச் செலுத்தித் தன்னை ஜனாதிபதி வேட்பாளராகக் காட்டினார்.
இந்நிலையில், தன்னால் பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்க முடியாது என்றார்.ஏனென்றால் தான் இப்போது ஜனாதிபதி வேட்பாளராகவுள்ளதாகக் கூறினார். அப்படியென்றால், இந்த ஜனாதிபதி ரணில், பதில் பொலிஸ் மா அதிபரை நியமித்த பின்னர், கட்டுப்பணத்தினைச் செலுத்தி வேட்பாளராகி இருக்கலாம்.
அதனை ஜனாதிபதி செய்யாமை தேர்தலைக் குழப்புவதற்கான செயற்பாடு என்றுதான் கூற வேண்டியுள்ளது. மொத்தத்தில் ஜனாதிபதி இன்னும் தேர்தலுக்கு முழுமையாகத் தயாராகவில்லை என்பதையே மேற்படி திட்டமிட்ட நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன.
இதனை வழமை போல் ஜனாதிபதி மறுத்தாலும் உண்மைகளை மூடி மறைக்க முடியவில்லை“ எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் குறிப்பிட்டுள்ளார்.