சமூக ஊடகங்களைப் பார்க்கும்போது, IMF இடம் இருந்து இலங்கை விலக வேண்டும்???


சமூக ஊடகங்களைப் பார்க்கும்போது, IMF இடம் இருந்து இலங்கை விலக வேண்டும் என்ற கருத்தாக்கத்தில் இன்றும் பலர் இருந்து வருவதைக் காணக் கூடியதாக இருக்கிறது. இது வெறுமனே சாத்தியமா?

உண்மையில் நீண்டகால நோக்கில் IMF இல் தங்கியிருக்கும் நிலை சாராமல் நாட்டின் பொருளாதாரத்தை தற்சார்பு நிலையில் வளர்த்துக் கொள்வது என்பது மிகவும் புத்திசாலித்தனமான ஒரு தேர்வு.

ஆனால் இன்றைய சூழ்நிலையில் IMF இடம் இருந்து விலகுவது என்பது உடனடியாக சாத்தியமற்றது. அது ஒரு பொருளாதார ரீதியான தற்கொலை முயற்சியாகவும் அமையலாம்.

IMF வழங்கும் நிதி உதவி என்பது மிகச் சிறிய அளவில் இருந்தாலும், அவர்கள் மூலம் கிடைக்கும் அங்கீகாரம் என்பது இன்று இலங்கைக்கு மிகவும் தேவைப்படுகிறது. அதுவே சர்வதேச முதலீடுகள் மற்றும் உதவிகளுக்கான கதவுகளைத் திறந்து விடும்.

ஆனால் நிச்சயமாக நாம் மீண்டும் ஒரு முறை சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படாமல் எமது நாட்டைக் கட்டி எழுப்புதல் வேண்டும் என்பதும் அதேவேளை சர்வ நிச்சயம்.

இது வரை இலங்கை 16 தடவைகள் சர்வதேச நாணயத்திடம் நிதியுதவிகளைப் பெற்றிருக்கிறது. ஒரு தடவை கூட அவர்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்றியதில்லை. குறிப்பாக ஆளும் தரப்பையோ அவர்களது சகபாடிகளையோ பாதிக்கக்கூடிய எந்த நிபந்தனைகளையும் எமது நாடு நிறைவேற்றியதில்லை.

இந்த சுழற்சியில் 17 வது தடவையாக இந்த முறையும் நாம் அவர்களிடம் நிதியுதவி பெற்றிருக்கிறோம். இந்த நிதியுதவியை வழங்க IMF விதித்த நிபந்தனைகளில் இன்னமும் சில நிறைவேற்றப் படாமலே உள்ளன.

International Monetary Fund என்பதன் சுருக்கமே IMF ஆகும். இது தமிழில் சர்வதேச நாணய நிதியம் என அறியப் படுகிறது.

இரண்டாம் உலகப் போரின் பின்னர் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அதனை நிவர்த்தி செய்ய ஒரு அமைப்பின் அவசியம் எல்லா நாடுகளிலும் உணரப் பட்டது. இதன் விளைவாக சர்வதேச நாணய நிதியம் 1944 ஆம் ஆண்டு Bretton Woods மாநாட்டில் தோற்றம் பெற்றது.

நாணயங்களின் பெறுமதி வீழ்ச்சியடைவதைத் தடுத்தல், நாடுகளிடையே பொருளாதார ஒத்துழைப்பையும், ஸ்திரத் தன்மையினையும் ஏற்படுத்தல், பொருளாதார நெருக்கடிகளில் சிக்கும் நாடுகளுக்கு குறுகிய கால நிதியுதவிகளை வழங்குவதன் மூலம் ஒரு பொறிமுறையை ஏற்படுத்தி அவை பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடையாமல் தடுத்தல் போன்ற நோக்கங்களின் அடிப்படையிலேயே சர்வதேச நாணய நிதியம் ஸ்தாபிக்கப் பட்டது.

சர்வதேச நாணய நிதியத்தின் அடிப்படைக் கொள்கைகளாக பொருளதார ஒத்துழைப்பு, நிதியியல் ஸ்திரத்தன்மை, சர்வதேச வர்த்தகம், பொருளாதார வளர்ச்சி, வறுமை ஒழிப்பு போன்றவை உள்ளன.

இருந்தபோதும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகிற ஒரு நிறுவனமாகவும் சர்வதேச நாணய நிதியம் காணப்பட்டு வருகிறது.

இதற்கு பின்வருவனவற்றைப் பிரதான காரணிகளாகக் குறிப்பிடலாம்.

1. நிதியுதவிகளை வழங்க IMF விதிக்கும் கடுமையான பொருளாதார சீர்திருத்தங்கள் மோசமான பாதிப்புகளை அந்தந்த நாடுகளில் ஏற்படுத்துவதுடன், சில வேளைகளில் எதிர்மறையான விளைவுகளையும் கொடுக்கின்றன. உதாரணமாக சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் ஏற்படும் பாதிப்புக்கள், மற்றும் தனியார் மயமாக்கங்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

2. நாடுகளுக்கு இடையே உள்ள பொருளாதார, சமூக, அரசியல் வேறுபாடுகளைக் கருத்தில் கொள்ளாமல் எல்லா நாடுகளுக்கும் ஒரே வகையான சீர்திருத்தங்களை வழங்க முற்படுதல்

3. சர்வதேச நாணய நிதியம் விதிக்கும் நிபந்தனைகளால் நாடுகளின் இறையாண்மைக்கு பாதிப்புக்கள் ஏற்படுகிறது.

4. சர்வதேச நாணய நிதியம் பெரும்பாலும் தாராளமயவாத கொள்கைகளைக் கொண்டுள்ளதால் பெரும் செல்வந்தர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இவை சாதகமாக இருந்தாலும் சாதாரண மக்களை மோசமாக பாதிக்கிறது.

5. பிரச்சனைகளின் அடிப்படைக் காரணிகளை ஆராயாமல் வழங்கப்படும் தற்காலிகத் தீர்வுகள் அந்த நாடுகளில் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இதனால் அந்த நாடுகள் மீண்டும் மீண்டும் IMF இடம் செல்லும் நிலை ஏற்படுகிறது.

6. சர்வதேச நாணய நிதியம் எடுக்கும் முடிவுகளில் வெளிப்படைத் தன்மை இருப்பதில்லை என்பதுடன் அவர்களின் தலையீட்டால் நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கும் அவர்கள் பொறுப்புக் கூறுவதில்லை.

7. சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளில் பெருமளவு செல்வந்த நாடுகளினதும் வர்த்தகர்களினதும் தலையீடு காணப்படுகிறது.

8. சில நேரங்களில் IMF வழங்கும் நிதியுதவிகள் நாட்டின் கடன்படு நிலையை அதிகரித்து, அந்த நாடுகள் IMF இடம் மீண்டும் மீண்டும் கடன் பெறும் ஒரு கடன் சுழற்சிக்குள் சிக்க வைக்கிறது.

IMF இன் தலையீட்டினால் மோசமாக பாதிப்படைந்த ஒரு நாடாக கிரீஸ் நாட்டினைக் குறிப்பிடலாம். இதனை சர்வதேச நாணய நிதியமும் பின்னாட்களில் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

அதேவேளை உலகில் எல்லா நாடுகளும் சர்வதேச நாணய நிதியத்தின் நிதிதவிகளில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் இருக்கிறதா என்று பார்த்தால் சர்வதேச நாணயத்திடம் நிதியுதவி பெறாத, அல்லது மிகக் குறைந்த அளவே அவர்களுடன் உறவுகளைப் பேணும் பல நாடுகள் உண்மையில் பொருளாதார ரீதியில் மிகவும் பலமாகவே இருக்கின்றன என்பது உண்மை.

அதற்கு உதாரணமாக கீழ்வரும் நாடுகளைக் குறிப்பிடலாம்.

Norway – உறுதியான எண்ணெய்க் கையிருப்பைக் கொண்ட நாடு, சிறப்பாக நிர்வகிக்கப்படும் பொருளாதாரம்

Switzerland – வங்கி மற்றும் நிதித் துறையில் பிரபலமான செல்வந்த நாடு

Singapore – வலிமையான பொருளாதாரத்தையும், கையிருப்புகளையும் கொண்ட நாடு

United Arab Emirates – எண்ணெய் வளம் மற்றும் பன்முகத் தன்மை வாய்ந்த பொருளாதாரம் கொண்ட நாடு.

Luxembourg – ஸ்திரமான பொருளாதாரம் கொண்ட அதிக வருமானம் ஈட்டும் ஒரு நாடு

சர்வதேச நாணய நிதியம் என்பது எமக்கு தேவையா என்று கேட்டால் அது அந்தந்த சூழ்நிலைகளைப் பொறுத்ததே என்பதே பதிலாக இருக்கும். ஆனால் நிரந்தர கடன் பொறியில் சிக்காத ஸ்திரமான பொருளாதாரம் ஒன்றே நாட்டுக்கு தேவை.
புதியது பழையவை