அனுரகுமாரவின் கட்சி தமிழர் பகுதிகளை கைப்பற்றியது எப்படி? - தமிழ் கட்சிகள் வரலாறு காணாத பின்னடைவு!



இலங்கையின் 10வது நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளின் பிரகாரம், தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களைக் கைப்பற்றி, வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது.

நேரடி வாக்களிப்பின் மூலம் 141 ஆசனங்களையும், தேசிய பட்டியல் மூலம் 18 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

அதத்துடன் இலங்கையின் தமிழர் பகுதிகளில் இதுவரை காலம் தமிழ் அரசியல் கட்சிகள் முன்னிலை வகித்து வந்த நிலையில், வரலாற்றில் முதல் தடவையாக பெரும்பாலான தமிழர் பகுதிகளில் தேசிய கட்சியாக விளங்கும் புதிய ஜனாதிபதி அநுர குமாரவின் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

இலங்கையில் மத்தியில் ஆட்சி செய்யும் தேசிய கட்சியொன்று தமிழர் பகுதிகளில் அதிகாரத்தைக் கைப்பற்றிய முதலாவது சந்தர்ப்பமாக இந்த நாடாளுமன்றத் தேர்தல் அமைந்துள்ளது.

இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் தமிழ் அரசியல் கட்சிகள் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ள தருணமாக இது கருதப்படுகிறது.

குறிப்பாக மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம் தவிர்த்து, ஏனைய தமிழர் தேர்தல் மாவட்டங்கள் அனைத்திலும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது.

இதற்கு தமிழ் அரசியல்வாதிகள் மீதான தமிழ் மக்களின் விரக்தியும் அதிருப்தியும் ஒரு முக்கியக் காரணம் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா.

அதோடு, வடக்கில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஒரு வாரத்திற்கு முன்னர் ஆற்றிய உரை, அங்குள்ள மக்களின் மனங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தான் கருதுவதாகக் கூறுகிறார் அவர்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய நிர்வாக மாவட்டங்கள் இணைந்த வகையில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் அமைந்துள்ளது.

இதன்படி, 593,187 வாக்காளர்களைக் கொண்ட யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில், இம்முறை 358,079 வாக்காளர்களே வாக்களித்திருந்தனர்.

அவர்களில் 325,312 வாக்குகளே செல்லுபடியான வாக்குகளாகக் கருதப்பட்டதுடன், 32,767 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

இதில் தேசிய மக்கள் சக்தி 80,830 வாக்குகளைப் பெற்று, மூன்று ஆசனங்களைத் தன்வசப்படுத்தியது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 63,327 வாக்குகளைப் பெற்று, ஒரு ஆசனத்தையும், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் 27,986 வாக்குகளைப் பெற்று ஓர் ஆசனத்தையும் பெற்றுள்ளன.

சுயேச்சைக் குழு 17க்கு, 27,855 வாக்குகள் கிடைத்துள்ளதுடன், அந்தக் குழுவிற்கும் ஓர் ஆசனம் கிடைத்துள்ளது.


மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய நிர்வாக மாவட்டங்கள் இணைந்த வகையில், வன்னி தேர்தல் மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 306,081 வாக்காளர்களை கொண்ட வன்னி தேர்தல் மாவட்டத்தில், இம்முறை 211,140 வாக்காளர்களே வாக்களித்திருந்தனர்.

இவர்களில் 195,886 வாக்குகளே செலுப்படியான வாக்குகளாகக் கருதப்பட்டதுடன், 15,254 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 39,894 வாக்குகள் கிடைத்துள்ளதுடன், 2 ஆசனங்களை அந்தக் கட்சி கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்திக்கு 32,232 வாக்குகள் கிடைத்துள்ளதுடன், அந்தக் கட்சிக்கு ஓர் ஆசனம் கிடைத்துள்ளது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு 29,711 வாக்குகள் கிடைத்துள்ள அதேவேளையில், அந்தக் கட்சிக்கு ஓர் ஆசனம் கிடைத்துள்ளது.

இதுபோக, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணிக்கு மற்றும் இலங்கைத் தொழிலாளர் கட்சிக்குத் தலா ஓர் ஆசனம் கிடைத்துள்ளன. வன்னி தேர்தல் மாவட்டத்தின் மன்னார் தொகுதியை 15,007 வாக்குகளைப் பெற்று ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

தேசிய மக்கள் சக்திக்கு மன்னார் தேர்தல் தொகுதியில் 7,948 வாக்குகள் கிடைத்துள்ளன. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு 7,490 வாக்குகள் கிடைத்துள்ளன.

வவுனியா தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்திக்கு 19,786 வாக்குகள் கிடைத்துள்ள நிலையில், வவுனியா தேர்தல் தொகுதியை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு 5,575 வாக்குகள் கிடைத்துள்ளன. ஐனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு 5,886 வாக்குகள் கிடைத்துள்ளன. ஜனநாயக தேசிய கூட்டணிக்கு 6,556 வாக்குகள் கிடைத்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி 10,736 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன், இலங்கைத் தொழிலாளர் கட்சி வவுனியா தேர்தல் தொகுதியில் 8,354 வாக்குகளைப் பெற்றுள்ளது.

முல்லைத் தீவு தேர்தல் தொகுதியில் 14,297 வாக்குகளைப் பெற்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி முன்னிலை வகிக்கிறது.

தேசிய மக்கள் சக்திக்கு முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் 7,789 வாக்குகளும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு 5,133 வாக்குகளும் கிடைத்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி 4,664 வாக்குகளைப் பெற்றுக் கொண்டது.


மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 96,975 வாக்குகளைப் பெற்று முதல் இடத்தில் உள்ளது. தேசிய மக்கள் சக்தி 55,498 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றது.

அடுத்தபடியாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 40,139 வாக்குகளைப் பெற்றுக் கொண்டது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு மூன்று ஆசனங்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி ஆகியவற்றுக்குத் தலா ஒவ்வொரு ஆசனங்களும் கிடைத்துள்ளன.

மொத்தம் 449,686 வாக்காளர்களைக் கொண்ட மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில், இம்முறை 302,382 வாக்காளர்களே வாக்களித்திருந்தனர்.

இவர்களில் 287,053 வாக்குகளே செல்லுபடியான வாக்குகளாகக் கருதப்பட்டதுடன், 15,329 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

திருகோணமலை மாவட்டத்திலும் தேசிய மக்கள் சக்தி பாரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி, 87,031 வாக்குகளைப் பெற்று, இரண்டு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 53,058 வாக்குகளைப் பெற்றதோடு, ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 34,168 வாக்குகளைப் பெற்று, ஒரு ஆசனத்தை கைப்பற்றியது.

மொத்தம் 315,925 வாக்காளர்களை கொண்ட திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில், இம்முறை 218,425 வாக்காளர்களே வாக்களித்திருந்தனர்.

இவர்களில் 204,888 வாக்குகளே செல்லுபடியான வாக்குகளாகக் கருதப்பட்டதுடன், 13,537 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி அதிக ஆசனங்களைக் கைப்பற்றி, வெற்றியீட்டியுள்ளது.

தேசிய மக்கள் சக்திக்கு திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 146,313 வாக்குகள் கிடைத்துள்ளதுடன், அந்த மாவட்டத்தில் 4 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

இரண்டாவது இடத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு 46,899 வாக்குகளும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு 33,911 வாக்குகளும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு 33,632 வாக்குகளும் கிடைத்துள்ளன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆகியவற்றுக்குத் தலா ஒவ்வொரு ஆசனங்கள் கிடைத்துள்ளன.

இதுபோக மலையகத் தமிழர்கள் அதிகளவில் வாழும் நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, களுத்துறை உள்ளிட்ட பகுதிகளில் தேசிய மக்கள் சக்தி வெற்றியீட்டியுள்ளது.

இலங்கையின் தமிழர் பகுதிகளில் இதுவரை காலம் தமிழ் அரசியல் கட்சிகள் முன்னிலை வகித்து வந்த நிலையில், வரலாற்றில் முதல் முறையாக மட்டக்களப்பு தவிர அனைத்து தமிழர் பகுதிகளை அநுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

அநுர குமாரவின் இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக, தமிழர்களுக்கு தமிழ் அரசியல்வாதிகள் மீதுள்ள விரக்தியும் அதிருப்தியுமே காரணம் என்று பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா கூறினார்.

“தென்னிலங்கை மக்களைப் போலவே, வட, கிழக்கு தமிழ் மக்களும் மாற்றத்தை விரும்பியுள்ளார்கள் என்பது தெளிவாகிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில்கூட, ஐக்கிய மக்கள் சக்திக்குக் கணிசம் ஆன ஆதரவு வடக்கு, கிழக்கு தமிழர் பகுதிகளில் இருந்தாலும், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் நேரடியாகவே தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். இது, அவர்கள் மாற்றத்தை விரும்பியதைக் காட்டுகிறது,” என்று தெரிவித்தார் சிவராஜா.

மேலும், தமிழர் பிரதேங்களில் தமிழ் அரசியல் கட்சிகள் எல்லா இடங்களிலும் பிரிந்து போட்டியிட்டதால், தமிழ் கூட்டமைப்பு இரண்டாக பிரிந்து, அதிலும் சுயேட்சை குழுக்கள் என பிரிந்து பல கோணங்களில் சென்றன. இதைப் பார்த்து அதிருப்திக்கு ஆளான மக்கள் தங்களுடைய கருத்தைத் தேர்தல் மூலம் வெளிப்படுத்தியுள்ளதாகக் கூறுகிறார் அவர்.

குறிப்பாக வடக்கில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஒரு வாரத்திற்கு முன்னர் ஆற்றிய உரை, அங்குள்ள மக்களின் மனங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்ககூடும் எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

“நாங்கள் உங்களுக்குரிய தீர்வை பெற்றுக்கொடுப்போம். வடக்கிற்கும், தெற்கிற்கும் வித்தியாசம் இல்லாத தீர்வை தருவோம்’ என்று ஜனாதிபதி அங்கு ஆற்றிய உரை மக்கள் மனதில் பெரிதாக எடுப்பட்டிருக்கின்றது.”

ஆகையால், ஜனாதிபதி தலைமையிலான கட்சிக்கும் ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்கலாமே என்று மக்கள் தீர்மானித்துள்ளதாகத் தெரிவதாகக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் சிவராஜா. மேலும், மலையகத்திலும் இதே நிலைதான் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் அடங்களாக 145 ஆசனங்களைக் கைப்பற்றி சாதனை படைத்தது.

எனினும், அந்த எண்ணிக்கையையும் தாண்டி தேசிய மக்கள் சக்தி இம்முறை 159 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகள் மற்றும் நாடாளுமன்ற ஆசனங்களின் விவரங்கள் விரிவாக:

தேசிய மக்கள் சக்தி (NPP) – 6,863,186 வாக்குகள்
159 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1,968,716 வாக்குகள்
40 ஆசனங்கள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 500,835 வாக்குகள்
5 ஆசனங்கள்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 350,429 வாக்குகள்
 3 ஆசனங்கள்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) – 257,813 வாக்குகள் 
8 ஆசனங்கள்

சர்வஜன அதிகாரம் (SB) - 178,006 வாக்குகள் 
1 ஆசனம்

ஐக்கிய ஜனநாயகக் குரல் (UDV) - 83,488 வாக்குகள் 
(0 ஆசனம்)

வேறு கட்சிகள் - 945,533 வாக்குகள் 
(9 ஆசனங்கள்)

இதன்படி, தேசிய மக்கள் சக்தி 6,863,186 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளதுடன், மொத்த வாக்களிப்பில் அதன் பங்கு 61.56% எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாடாளுமன்றத் தேர்தலில் 141 ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட தேசிய மக்கள் சக்திக்கு, 18 தேசிய பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி 1,968,716 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளதுடன், அது மொத்த வாக்களிப்பில் 17.66% எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 35 ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட ஐக்கிய மக்கள் சக்திக்கு, 5 தேசிய பட்டியல் உறுப்புரிமைக்கான அனுமதி கிடைத்துள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன், அந்தக் கட்சி 500,835 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது. புதிய ஜனநாயக முன்னணி மொத்த வாக்களிப்பில் 4.49% வாக்குகளை சுவீகரித்துள்ளது.

புதிய ஜனநாயக முன்னணிக்கு மொத்தமாக 3 ஆசனங்கள் கிடைத்துள்ள நிலையில், இரண்டு தேசிய பட்டியல் ஆசனங்கள் அந்தக் கட்சிக்கு கிடைத்துள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 350,429 வாக்குகளைப் பெற்றுள்ள அதேவேளை, அந்தக் கட்சிக்கு மொத்தமாக இரண்டு ஆசனங்கள் கிடைத்துள்ளன. இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஒரு தேசிய பட்டியல் ஆசனம் கிடைத்துள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 257,813 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன், 7 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இதைத் தொடர்ந்து அக்கட்சிக்கு ஒரு தேசிய பட்டியல் ஆசனம் கிடைக்கப் பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு இரண்டு ஆசனங்கள் கிடைத்துள்ள நிலையில், ஒரு தேசிய பட்டியல் ஆசனம் கிடைத்துள்ளது.

சர்வஜன அதிகாரம் கட்சிக்கு 178,006 வாக்குகள் கிடைத்துள்ள பின்னணியில், அந்தக் கட்சிக்கு ஒரு ஆசனம்கூடக் கிடைக்கவில்லை. எனினும், கட்சி பெற்ற வாக்கு விகிதத்தின் அடிப்படையில் ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைத்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 79,460 வாக்குகளைப் பெற்று முன்னிலை வகித்தது. அதோடு, இம்முறை அந்த வாக்கு விகிதம் அதிகரித்துள்ளது.

அத்துடன், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டாவது இடத்தை தன்வசப்படுத்திய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இம்முறை எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளாது பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக செய்தியாளர் ரஞ்சன் அருண் பிரசாத்திடம் பிபிசி தமிழுக்காகப் பேசிய மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா, “தமிழ் அரசியல்வாதிகள் மீதான விரக்தி மற்றும் அதிருப்தியை தமிழர்கள் இம்முறை தேர்தலின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். அத்துடன், தமிழர்கள் தற்போது மாற்றத்தை விரும்புவதாகவும்” கூறினார்.
புதியது பழையவை