இன துரோகிகளின் இறுதி காலம் மிக மிக கசப்பானது!!



தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு  மாவட்ட கட்டளை தளபதியாக இயங்கிய கருணா,தன்னுடைய பதவி காலத்தில் நடைபெற்ற அத்தனை மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளிலும் மட்டக்களப்பில் பிரதான சுடரினை ஏற்றி மடிந்த வீரர்களுக்காக அஞ்சலித்து வந்திருக்கிறார் .

இறுதியாக 2003 கார்த்திகை இருபத்தி ஏழில் தனது இறுதி அஞ்சலியை தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் செலுத்தினார்.


விடுதலைப்புலிகளின்  பாரம்பரியத்தை மீறி அந்த ஆண்டில் சில புதுமைகளை சேர்த்து அந்த மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தார்.முன்னேற்பாடுகளிலும் வீரர்களின் அணிநடைமற்றும் அஞ்சலிக்கும் முறை என்பவற்றையும் தானே முன்னின்று பயிற்சி வழங்கி வழிநடத்தினார்.

சமாதான உடன்படிக்கை காலத்தில் அந்த மாவீரர் நாள் நிகழ்வுகள் அமைந்திருந்தமையால் தரவை மாவீரர் துயிலுமில்ல நிகழ்வுகள் முக்கியத்துவம் பெற்றன.மரபை மீறிய அந்த மாவீரர் நாள் நிகழ்வு பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தின.

அந்த இறுதி நிகழ்வோடு விடுதலை புலிகள் இயக்கத்தை விட்டு பிரிந்த அவர்,அதன் பின்னர் போராளிகள் தொடர்பிலான எந்த ஒரு அஞ்சலி நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவில்லை.

2003 ற்கு பின்னரான மாவீரர் நாள் அனுட்டானங்கள் நடைபெறும் பொழுதுகளில் ,கருணா நிறைந்த மது போதையில் கிடப்பதாகவே அவரது அருகாமையாளர்கள் காதோடு காது வைத்து பேசிக்கொள்வர்.

தனது கட்டளையை ஏற்று சண்டையிட்டு மடிந்து போன வீரனைகூட நினைவில் கொள்ளும் நிலையில் அவர் இருப்பதில்லை என்பதுதான் தகவல்.

ஆனால்,திடீரென ஞானம் வந்தது போல் கதிரவெளியில் கடந்த 10 ஆம் திகதி போய் நின்றிருக்கிறார் கருணா.


சித்திரை 10 ஆம் திகதியை பிள்ளையான் அணியினர் சிவப்பு சித்திரை எனும் பெயரில் வெருகல் துறை மற்றும் ஏனைய இடங்களில் தம்மோடு இருந்து மாண்டு போன அல்லது தமிழினத்தை காட்டிக்கொடுத்தனர் என குற்றஞ்சாட்டி விடுதலை புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட  சில உறுப்பினர்களை நினைவுகூர்ந்து வந்திருந்தனர் .

தமிழ்மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரான பிள்ளையான் என அறியப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன்  அவர்கள் தலைமையில் இதுவரை இடம்பெற்று வந்த அந்த நினைவேந்தல் முதல் தடவையாக இம்முறை கருணா அவர்களின் கைக்கு மாறியிருக்கிறது.

21 வருடங்களுக்கு பின்னர் போராளிகளை அஞ்சலிக்கச்சென்ற கருணா,யாரை நினைவுகூர்ந்திருப்பார்?

கருணா என்ற ஒற்றை நபருக்காக தான் கொண்ட கொள்கை,கோட்பாடு எல்லாவற்றையும் மறந்து வெருகல் துறையில் களமாடிய பாரதிராஜாவை நினைவு கூர்ந்திருப்பாரா?அம்மான் என்ற பெயரைக்கேட்டாலே புல்லரித்து நின்ற மாபெரும் தளபதி ராபட்டை நினைவுகூர்ந்திருப்பாரா?அல்லது ஊரவன் என்ற அடிப்படையில் தன்னை நம்பி வந்த ஜிம்கலி தாத்தாவை நினைவுகூர்ந்திருப்பாரா?

அல்லாது போனால் கருணா  தலையீடு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினுள் இருக்கவேண்டும் என்று வாதாடியதால் பிள்ளையானுக்காக கொல்லப்பட்ட நந்தகோபனை நினைவுகூர்ந்திருப்பாரா?பிள்ளையானின் கோட்டைக்குள் நின்று கருணாவுக்காக கொக்கரித்து வெல்லமுடியாது போகவே சையனைட் அருந்தி மாண்டுபோன மருத்துவ போராளி திலீபனை நினைவுகூர்ந்திருப்பாரா?

எத்தனை எத்தனை பெறுமதியான உயிர்களை தனது சுயநலத்திற்காக பலியிட்ட கருணா அவர்கள்,நேற்றுவரை அந்த நினைவுகளே இன்றி கிடந்து,இன்று வந்து விளக்கேற்றி அஞ்சலிப்பதன் மாயமென்ன?

இங்கே இரண்டு கேள்விகள்தான் தொக்கி நிற்கின்றன.

1.இனி தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சிக்கு கருணாதான் தலைவரா?

2.இனி பிள்ளையானை இந்த அரசாங்கம் சிங்களவர்களை பாதுகாக்கும் நோக்கில் அவர்கள் நடாத்திய அத்தனை கொலைகளுக்கும் காரணகர்த்தாவாக்கி சிறையிலேயே அடைத்துவிடபோகிறதா?

வியாளேந்திரனின் சிறை பிரவேசம்,பிள்ளையானின் கைது,கருணாவின் மீளுருவாக்கம் என்பனவெல்லாம் தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் நல்ல வரலாற்று பாடங்களை கற்றுத்தந்துகொண்டுதான் இருக்கின்றன.

"இன துரோகிகளின் இறுதி காலம் மிக மிக கசப்பானது"".
புதியது பழையவை