அநுர அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் எதிர்வரும் 23 - 26 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இவ்விஜயத்தின்போது அவர் நாட்டின் சமகால மனித உரிமைகள் நிலைவரம், கடந்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட தரப்பினரின் நிலைப்பாடுகள் என்பவற்றைக் கண்காணிக்கும் அதேவேளை, அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள், பாதிக்கப்பட்ட தரப்பினர், சிவில் சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சிறுபான்மையின அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அவரது இலங்கை வருகைக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்நாட்டில் இயங்கிவரும் 104 சிவில் சமூகப்பிரதிநிதிகளின் கூட்டு, சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களின் கூட்டு, தமிழ் சிவில் சமூக அமையம் மற்றும் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் ஆகிய நான்கு தரப்புக்கள் தனித்தனியாக 4 கடிதங்களை உயர்ஸ்தானிகருக்கு அனுப்பிவைத்துள்ளன.
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட மூன்று தசாப்தகால யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான மிகமோசமான மீறல்கள் தொடர்பில் இன்னமும் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவில்லை.