ஊடகவியலாளர்கள் மீது தொடரான தாக்குதல்!



ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர் மீது தேசிய மக்கள் சக்தி சார்பிலான காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.பர்ஹான் தலைமையிலான குழுவினர் தாக்கியுள்ளனர். 

இத்தாக்குதல் சம்பவம் நேற்றிரவு (11-07-2025) இடம்பெற்றுள்ளது. 

கல்முனையிலிருந்து மாளிகைக்காட்டை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமரை தேசிய மக்கள் சக்தி சார்பிலான காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.பர்ஹான் உள்ளிட்ட குழுவினர் இடைமறித்து அவரை தாக்கியுள்ளனர்.

இதுதொடர்பில் காரைதீவு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பிரதேசத்தில் இடம்பெறும் செய்திகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் போன்றவற்றை உடனுக்குடன் எழுதிவரும் ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர் பிரபல சமூக செயற்பாட்டாளராகவும், மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். 

தேசிய மக்கள் சக்தியின் முஸ்லிம் விரோதச் செயல்களை துணிந்து கேள்விக்குட்படுத்தி செய்திகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை எழுதிவந்தவர் மீதான தாக்குதலுக்கு பலரும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் சமீப நாட்களில் ஊடகவியலாளர்கள் மீது அரசியல்வாதிகள் தாக்குதல் நடத்துவதும், அச்சுறுத்துவதும் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
புதியது பழையவை