இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவுக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அவரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேநேரம், இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேலும் இரண்டு சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதிவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.
வைத்தியர் மகேஷி விஜேரத்ன, தான் இணைந்த தனியார் நிறுவனம் மூலம் நோயாளிகளுக்கு ரூ.50,000 பெறுதியான மருத்துவ உபகரணங்களை ரூ.175,000க்கு விற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனால், நோயாளிகளுக்கு ரூ.300 மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகக் குற்றம் சாட்டிய இலஞ்ச ஒழிப்பு ஆணையம், வைத்தியர் அதிகாரப்பூர்வ வைத்தியசாலை நடைமுறைகள் மூலம் அறுவை சிகிச்சை பொருட்களை வாங்காமல் பொது சேவை கொள்முதல் விதிகளை மீறியதாகக் கூறியது.
அதற்கு பதிலாக அந்தப் பொருட்கள் அவரது தனியார் நிறுவனம் மூலம் சுமார் 300 நோயாளிகளுக்கு விற்பனை செய்ததாகவும் தெரியவந்துள்ளது.
பல நாட்களாக மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அவர் அறுவை சிகிச்சை செய்திருப்பதும் அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த வைத்தியரும் அவரின் மருத்துவ மோசடிக்கு உதவிய அவரது இரண்டு சகாக்களும் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.