திருகோணமலை மாவட்டம் மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைச்சேனை களப்புப் பகுதியில் நீரில் மூழ்கிய நிலையில் மீனவரொருவரின் சடலம் நேற்று (30-07-2025) ஆம் திகதி காலை மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மூதூர் -பாலநகர் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 45 வயதான சேகு முகம்மது றம்சூன் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் நேற்று அதிகாலை களப்புக் கடலுக்கு மீன்பிடிப்பதற்காகச் சென்றுள்ள நிலையில் களப்புப் பகுதியில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். மீன்பிடிப்பதற்காகச் சென்ற மற்றுமொரு மீனவரொருவர் நீரில் மிதந்த நிலையில் சடலமொன்று கிடப்பதைக் கண்டு மூதூர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.இதன் பின்னர் மூதூர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த மீனவரின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பவ இடத்திற்கு மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் வருகை தந்து சடலத்தை பார்வையிட்டு விசாரணைகள் மேற்கொண்ட பின்னர், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.