வீரமுனை படுகொலையும் மறுக்கப்பட்ட நீதியும்.!

வீரமுனை என்பது கிழக்கு மாகாணத்தில் மிகவும் பழமையானதும் பாரம்பரியமானதுமான பிரதேசமாகும்.சோழ இளவரசிகளில் ஒருவரான சீர்பாத தேவியினால் 08ஆம் நூற்றாண்டில் அபிவிருத்திசெய்யப்பட்ட மிகவும் பாரம்பரியத்தினைக்கொண்ட கிராமமாகும்.நூறு வீதிம் இந்துக்களைக்கொண்ட இக்கிராமத்தின் ஆலயமானது வரலாற்றுசிறப்பு மிக்கது மட்டுமல்ல கண்டியை தளமாக கொண்டு ஆட்சிசெய்த வாலசிங்கன் மன்னனின் மகன் இராஜசிங்கனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பொன் விளையும் விவசாய காணி பட்டயம் செய்யப்பட்டிருந்தது.இதன்காரணமாக சம்மாந்துறையினை சேர்ந்த இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல சிங்கள பேரினவாதிகளுக்கும் இந்த ஆலயத்தின் மீது தொடர்ச்சியான பார்வையிருந்தேவந்தது.நானும் வீரமுனையை பிறப்பிடமாக கொண்டவன்.1990ஆம் ஆண்டுவரையில் வீரமுனையிலேயே இருந்துவந்தோம்.

வீரமுனை-சம்மாந்துறை எல்லைப்பகுதியிலேயே எங்கள் வசிப்பிடமிருந்தது.அதன்காரணமாக நான் அறிந்த காலம் தொடக்கம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுவந்தோம்.குறிப்பாக 1988ஆம் ஆண்டு ஒரு தடவை வீரமுனை தீக்கிரையாக்கப்பட்டபோது எங்களது வீட்டில் இருந்த பொருட்களை எங்களது வீட்டுக்கு அருகிலிருந்து சகோதர இனத்தவர்கள் அள்ளிச்சென்றதை கண்டதாக எனது தந்தையார் தெரிவித்தார்.இதேபோன்று எனது தந்தையின் மோட்டார் சைக்கிளும் அவ்வாறே ஒருவரிடமிருந்து மீட்கப்பட்டது.நாங்கள் வீரமுனையில் தொடர்ச்சியாக எதிர்கொண்டுவந்த பிரச்சினையே 1990ஆம் ஆண்டு பூதாகரமான அழித்தொழிப்பாக அமைந்தது.


1989ஆம் ஆண்டுக்கும் 1990 ஆண்டுக்கும் இடையில் வீரமுனை மக்கள் சொல்லமுடியாத துன்பங்களை அனுபவித்தார்கள்.இரவோடு இரவாக பல தடவைகள் இடம்பெயர்ந்த அனுபவங்கள் எனக்கும் உள்ளது.வீரமுனையிலிருந்து காரைதீவுக்கு பல தடவைகள் இடம்பெயர்ந்திருக்கின்றோம். இதேபோன்று வீரச்சோலைக்கும் இடம்பெயர்ந்து சென்ற அனுபவம் இருக்கின்றது.

அதிலும் 1990ஆம் ஆண்டு ஜுன்,ஜுலை,ஆகஸ்ட் மாதம் என்பது வீரமுனை மக்களினால் என்றும் மறக்கமுடியாத நாளாகும்.அம்பாறையிலிருந்து இராணுவம் தமிழர் பகுதியை ஆக்கிரமிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்தபோது பல்வேறு அட்டூழியங்களை செய்ததுடன் அதற்கு துணையாக முஸ்லிம் ஊர்காவல் படையினரும் மாறியிருந்தனர்.வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தில் எங்கள் குடும்பம் இருந்தது.இதனைப்போன்று வீரமுனை இராம கிருஸ்ண வித்தியாலயம் மற்றும் சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயம் ஆகியவற்றில் வீரமுனை,வீரச்சோலை,மல்வத்தை,வளத்தாப்பிட்டி,மல்லிகைத்தீவு ஆகிய பகுதிகளிலிருந்து தமது உயிரை பாதுகாப்பதற்காக அனைவரும் தஞ்சமடைந்திருந்தனர்.

முகாமிலிருந்த காலப்பகுதியில் தினமும் அழுகுரல்களே கேட்கும்.முகாமிலிருந்து தமது வீடுகளுக்கு சென்றவர்களை காணவில்லை,முகாமிலிருந்து வெளியில் சென்றவர்களை கொண்டுபோரார்கள் என்று தினமும் அழுகுரல்களே ஒலிக்கும்.இரவு வேளைகளில் அழுகுரல்களே கேட்கும்.அச்சம் நிறைந்த சூழலே காணப்படும்.எங்களது முகாம்களுக்கு இலங்கை செஞ்சிலுவை சங்கம் வந்துசெல்லும் செஞ்சிலுவை சங்கம் வந்துசென்றால் அதன் பின்னர் இராணுவ வாகனங்கள் ஊர்காவல் படையினர் சூழ வருகைதந்து முகாம் முற்றாக சுற்றிவளைக்கப்பட்டு அங்கிருந்து இளைஞர்கள்,குடும்பதினர் என பஸ்களில் ஏற்றிச்செல்வார்கள்.ஆனால் அவர்களில் யாரும் திரும்ப வரமாட்டார்கள்.எங்களது தந்தையை இரண்டு தடவை கொண்டுசெல்வதற்கு இராணுவம் முயற்சிசெய்தபோது அங்கிருந்த பெண்கள் தமது பாவடைகளுக்குள் மறைத்து எங்களை பாதுகாத்ததை இன்று நினைக்கும்போதும் அச்சம் ஏற்படும்.இவ்வாறு பல தடவைகள் எங்களது முகாம்கள் சுற்றிவளைக்கப்பட்டு பஸ்களில் பலர் நூற்றுக்கணக்கானவர்கள் ஏற்றிச்செல்லப்பட்டபோதிலும் அதில் யாரும் திரும்பி வந்ததாக எனக்கு நினைவில் இல்லை.ஒரு தடவை எமது ஆலய வளாகத்திற்குள் மனித தலையொன்று எரிந்த நிலையில் கிடந்ததை இன்றும் மறக்கமுடியாத நினைவு இருக்கின்றது.ஒவ்வொரு தடவையும் இராணுவத்தினர் சுற்றிவளைப்புக்கு வரும்போது அவர்களுடன் முஸ்லிம் ஊர்காவல் படையினர் அதும் தமக்கு தெரிந்த நபர்கள் வந்திருப்பதாக அக்காலத்தில் பலர் பேசுவதை நான் கேட்டிருக்கின்றேன்.வீரமுனை படுகொலை நடைபெற்றபோது விசேட அதிரடிப்படையினரின் உதவியுடனேயே முஸ்லிம் ஊர்காவல் படையினர் வந்ததாக அந்த முகாமிலிருந்த மக்கள் சாட்சி பகிர்ந்தனர்.அதுவும் சம்மாந்துறை பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு வீரமுனை ஆலயம் மற்றும் பாடசாலைகளுக்குள் புகுந்து வெட்டியும் சுட்டும் காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளை முன்னெடுத்தாக இதனை நேரில் கண்டவர்கள் இன்றும் ஆதாரத்துடன் தெரிவிக்கின்றனர்.

ஆனால் இந்த படுகொலைகளுக்கான நீதியான விசாரணைகள் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லையென்பதே அனைவரது கவலையாகவும் இருக்கின்றது.

குறிப்பாக இந்த படுகொலைகள் நடைபெற்ற நிலையில் வீரமுனை உட்பட முகாமிலிருந்த மிகுதியான மக்கள் திருக்கோவில்,தம்பிலுவில் போன்ற இடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு அகதிமுகாம்களில் வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் வீரமுனை உட்பட அனைத்து கிராமங்களும் முற்றாக சூறையாடப்பட்டது.வீரமுனை மக்கள் வீரமுனைக்கு வரும்போது எதுவும் இல்லாத நிலையிலேயே வந்து குடியேறினார்கள்.
இவ்வளவு அநியாயங்கள் வீரமுனை மக்களுக்கு அருகில் புட்டும் தேங்காய் பூவுமாக இருந்தவர்களின் உதவியுடன் நிகழ்த்தப்பட்டபோதிலும் அவர்கள் நடந்த அநியாயங்களுக்கு இதுவரையில் தமிழ் மக்களிடம் வருத்தம்கூட தெரிவிக்காத நிலையே இன்றுவரையில் இருந்துவருகின்றது.அதனையும் தாண்டி தமது கிராமத்தின் தனித்துவத்தினை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்படவிருந்த வரவேற்பு கோபுரத்தினையும் அமைக்கவிடாமல் தடுக்கும் சக்திகளே அன்று வீரமுனையின் அழிவுக்கு துணையாக நின்றவர்களாக இருக்கலாம் என்பது எனது எண்ணமாகும்.வீரமுனை கிராமம் என்பது வெறுமனே வந்தேறுகுடிகள் அல்ல அந்த மண்ணின் பூர்வீக குடிகள்.இரு இனங்களும் தங்களுக்குள் ஒன்றுபட்டு வாழ்வதன் ஊடாக எதிர்காலத்தில் சகவாழ்வினை ஏற்படுத்தமுடியும்.வெறுமனே ஒரு இனத்தின் கலாசாரத்தினையும் பண்பாடுகளை புதைத்துவிட்டு தாங்கள் வாழ நினைத்தால் அது எவ்வாறான நிலைக்கு கொண்டுசெல்லும் என்பதை உண்மையான மனித நேயத்தினை மதிக்கும் அனைவரும் உணர்ந்துகொள்ளவேண்டும்.

வீரமுனை மக்கள் தங்களுக்கு நடந்த அநீயாயங்களை மறந்து தமது சக மதத்தவருடன் கடந்தகால கசப்புகளை மறந்துவாழும் நிலையில் தாங்கள் வரவேற்பு கோபுரம்போன்றவற்றிற்கு காட்டும் எதிர்ப்பானது எதிர்கால சமூகத்தின் மனங்கள் வடுக்களை ஏற்படுத்தும் என்பதை இனியாவது உணர்ந்துசெயற்படவேண்டும். 
தொடரும்………………….

புதியது பழையவை