செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 90 சதவீதமானவை ஆடையின்றியே புதைக்கப்பட்டிருக்கின்றன.
அத்தோடு அந்த மனித எலும்புக்கூடுகளில் சில ஒன்றன்மேல் ஒன்றாகவும், முறையற்ற விதத்திலும் புதைக்கப்பட்டிருப்பதையும், அவை புதைக்கப்பட்டிருக்கும் ஆழத்தையும் கருத்திற்கொண்டு நோக்குகையில், அங்கு சட்டவிரோத படுகொலைகள் இடம்பெற்றிருப்பதற்கும், அந்த உடல்கள் சட்டவிரோதமான முறையில் புதைக்கப்பட்டிருப்பதற்குமான நியாயமான சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்தோடு சகல தரப்பினருடனும் கலந்துரையாடி இம்மனிதப் புதைகுழிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு நிலையான செயன்முறையொன்று உருவாக்கப்படவேண்டும் எனவும், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளில் எந்தவொரு இராணுவ அதிகாரிகளும் தலையிடக்கூடாது எனப் பாதுகாப்பு அமைச்சர் உத்தரவு பிறப்பிக்கவேண்டும் எனவும் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
நிபுணர்களின் தகவல்களின்படி, இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 90 சதவீதமானவை ஆடைகள் எவையுமின்றியே கண்டறியப்பட்டுள்ளன.
அதுமாத்திரமின்றி அங்கு கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் சில ஒன்றுக்கு மேல் ஒன்றாகவும், முறையின்றியும் புதைக்கப்பட்டிருக்கும் நிலை மற்றும் அவை புதைக்கப்பட்டிருக்கும் ஆழம் என்பவற்றைக் கருத்திற்கொண்டு நோக்குகையில், அந்த உடல்கள் சட்டவிரோதமான முறையில் புதைக்கப்பட்டிருப்பதற்கும், அங்கு சட்டவிரோத படுகொலைகள் இடம்பெற்றிருப்பதற்குமான நியாயமான சாத்தியப்பாடுகள் உள்ளன.
இந்நிலையில் இவ்விசாரணைகளை செயற்திறன்மிக்க வகையில் பூர்த்தி செய்வதற்கு சர்வதேச நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் என்பன அவசியம் என நாம் இனங்கண்டோம். அதேபோன்று செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணை செயன்முறைகளில் இராணுவ அதிகாரிகள் எவ்வித தலையீட்டையும் மேற்கொள்ளக்கூடாது என பாதுகாப்பு அமைச்சரும், இராணுவத் தளபதியும் தெளிவாக உத்தரவிடவேண்டும் என ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
யாழ்.செம்மணி சித்துப்பாத்தியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் கட்டம் கட்டமாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களான பேராசிரியர் தையமுத்து தனராஜ், பேராசிரியர் பர்ஸானா ஹனீபா மற்றும் கலாநிதி கெஹான் குணதிலக்க, ஆணைக்குழுவின் ஆய்வு மற்றும் கண்காணிப்புப் பிரிவின் பணிப்பாளர் நிஹால் சந்திரசிறி, ஆணைக்குழுவின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பதிகாரி கே.கபிலன் வில்லவராஜன், ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய ஒருங்கிணைப்பாளர் ரி.கனகராஜ் ஆகியோர் கடந்த ஓகஸ்ட் மாதம் 3 – 4 ஆம் திகதி செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளைச் சென்று பார்வையிட்டனர்.
அதனையடுத்து இவ்விவகாரம் தொடர்பான தமது அவதானிப்புக்கள் மற்றும் பரிந்துரைகளை உள்ளடக்கி ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,”செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் குறித்த ஆராய்வு செயன்முறையொன்று கடந்த மாதம் 3 – 4 ஆம் திகதி வரை ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டது. தற்போதைய விசாரணை செயன்முறையைக் கண்காணிப்பதும், இவ்விவகாரத்துடன் தொடர்புடைய கட்டமைப்புக்களின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதும், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்களைச் சந்திப்பதும், அத்தரப்பினர் முகங்கொடுத்து வரும் சவால்களை இனங்காண்பதுமே இச்செயன்முறையின் பிரதான நோக்கங்களாகக் காணப்பட்டன.
அதற்கமைய கடந்த மாதம் 3 ஆம் திகதி காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சில சட்டத்தரணிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களைச் சந்தித்தோம். மறுநாள் 4 ஆம் திகதி செம்மணி மனிதப் புதைகுழி அமைந்துள்ள பகுதிக்குச் சென்று அகழ்வுப் பணிகளைப் பார்வையிட்டோம். அங்கு யாழ் நீதவான் ஏ.ஆனந்தராஜா, சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் மற்றும் குற்றவிசாரணைப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆரம்பகட்ட விசாரணைகளுக்கான பொறுப்பதிகாரி உள்ளிட்டோரைச் சந்தித்தோம்.
அதேபோன்று மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்படும் மனித எச்சங்கள் எவ்வாறு பேணப்படுகிறது எனக் கண்காணித்தோம். அம்மனிதப் புதைகுழியில் நேரடியாக நின்று பணியாற்றும் நிபுணர்களின் தகவல்களின்படி, இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 90 சதவீதமானவை ஆடைகள் எவையுமின்றியே கண்டறியப்பட்டுள்ளன. அதுமாத்திரமன்றி அங்கு கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் சில ஒன்றுக்கு மேல் ஒன்றாகவும், முறையின்றியும் புதைக்கப்பட்டிருக்கும் நிலை மற்றும் அவை புதைக்கப்பட்டிருக்கும் ஆழம் என்பவற்றைக் கருத்திற்கொண்டு நோக்குகையில், அந்த உடல்கள் சட்டவிரோதமான முறையில் புதைக்கப்பட்டிருப்பதற்கும், அங்கு சட்டவிரோத படுகொலைகள் இடம்பெற்றிருப்பதற்குமான நியாயமான சாத்தியப்பாடுகள் உள்ளன.
அதேவேளை தடயவியல் சார்ந்த மானுடவியல் நிபுணர்கள், தடயவியல் சார்ந்த தொல்லியல் நிபுணர்கள் உள்ளிட்ட சிறப்புத்தேர்ச்சி உடையோர் பற்றாக்குறை, கார்பன் டேட்டிங் உள்ளடங்கலாக துல்லியமான பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கான தொழில்நுட்ப வசதிகள் இன்மை, டி.என்.ஏ மாதிரி பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான போதிய வசதிகள் இன்மை என்பன உள்ளடங்கலாக செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதில் நிலவும் நிபுணத்துவ மற்றும் தொழில்நுட்ப பற்றாக்குறைகள் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டது.
இந்நிலையில் இவ்விசாரணைகளை செயற்திறன்மிக்க வகையில் பூர்த்தி செய்வதற்கு சர்வதேச நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் என்பன அவசியம் என நாம் இனங்கண்டோம். அத்தோடு செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளுக்கு அவசியமான போதிய நிதி உரிய காலப்பகுதியில் வழங்கப்படுவதிலும் சில குறைபாடுகள் நிலவுவதாக அறியமுடிகிறது.
மேலும் இம்மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளுக்கான ஒரு மாற்று செயன்முறை பிரயோகிக்கப்படவேண்டிய தேவைப்பாடு உள்ளது. அதுமாத்திரமன்றி அரச அதிகாரிகளால் நிகழ்த்தப்பட்ட மிகமோசமான குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளுக்காக ஒரு சுயாதீன நிரந்தர அலுவலகம் நிறுவப்படவேண்டும்.
இவ்வாறானதொரு பின்னணியில் துறைசார் நிபுணர்கள், சட்டத்தரணிகள், சிவில் சமூகப்பிரதிநிதிகள் உள்ளடங்கலாக சம்பந்தப்பட்ட சகல தரப்பினருடனும் கலந்துரையாடி மனிதப் புதைகுழிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான நிலையான செயன்முறையொன்றை உருவாக்குதல், செம்மணி மனிதப்புதைகுழி விசாரணைகளில் தொடர்புபட்டிருக்கும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்துடன் நெருங்கி செயற்படும் அதேவேளை, அவசியமான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கும், அவற்றை உரிய காலப்பகுதியில் வழங்குவதற்கும் அமைச்சுக்குள் குறித்தவொரு குழுவை நியமித்தல், செம்மணி மனிதப் புதைகுழி அமைந்துள்ள பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் மனித எச்சங்கள் உள்ளனவா என்பதைக் கண்டறிவதற்கு ஏதுவாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திடமிருந்து ஜி.பி.ஆர் ஸ்கேன் வசதியைப் பெற்றுக்கொடுத்தல், டி.என்.ஏ வங்கியை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல், அரச அதிகாரிகளால் நிகழ்த்தப்பட்ட குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளுக்கான நிரந்தர சுயாதீன அலுவலகத்தை ஸ்தாபித்தல் ஆகிய பரிந்துரைககளை நடைமுறைப்படுத்துவதற்கு நீதியமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மனிதப் புதைகுழி அகழ்வு உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு எதிரான எவ்வித ஒடுக்குமுறைகளையும் பிரயோகிக்கவேண்டாம் என குற்ற விசாரணைப் பிரிவினருக்கு பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தவேண்டும். அதேபோன்று செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணை செயன்முறைகளில் இராணுவ அதிகாரிகள் எவ்வித தலையீட்டையும் மேற்கொள்ளக்கூடாது என பாதுகாப்பு அமைச்சரும், இராணுவத் தளபதியும் தெளிவாக உத்தரவிடவேண்டும் என ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.