மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைகள் ஏற்படுத்தும் ஆபத்துகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்று (10.02.2026)ஆம் திகதி மாலை வெல்லாவெளி கலாசார மண்டபத்தில் நடந்தது.
இக்கூட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர் ஞா.சிறிநேசன், டாக்டர் இ.சிறிநாத், பிரதேசசபைத் தவிசாளர் வி.மதிமேனன் மற்றும் பிரதேச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டு பிரதேச அபிவிருத்திக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள், முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் (168 மில்லியன் ரூபா செலவுகள் – 48 திட்டங்கள்) தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.போரதீவுப்பற்று பிரதேசத்தில் நடைபெறும் சட்டவிரோத மணல் கடத்தல்கள், அம்பாறை-மட்டக்களப்பு எல்லைப்பகுதிகளில் பொலிஸ் காவலரணிகளை அமைக்க வேண்டிய கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
தொடரும் யானைகளால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் அசமந்த போக்கு காரணமாக பிரதேசத்தில் வேலைத்திட்டங்கள் முறையாக நடைபெறாமை குறித்து அதிருப்தி தெரிவிக்கப்பட்டது; தேவையான திட்டங்களை விரைவாக முன்னெடுக்குமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த கால வீடமைப்பு திட்டங்களில் பூரணப்படுத்தப்படாத வீடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு, பூரணப்படுத்தும் படிப்படியான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்பட்டது.கடந்த வெள்ள அனர்த்த காலங்களில் பாதிக்கப்பட்ட வீதிகள் மற்றும் மிக மோசமான நிலைமையுள்ள வீதிகளை திருத்தி, அதிகாரிகளுக்கு பணிப்புரைகள் வழங்கப்பட்டுள்ளன.