மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியின் மிக முக்கியமான போக்குவரத்துப் பாதையாகத் திகழ்ந்த புதுப்பாலம், இன்று (28.06.2026) மாலை திடீரென இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் கடந்து செல்லும் இந்த முக்கிய பாலம் உடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்று மாலை வேளையில், பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து ஆற்று நீரில் அமிழ்ந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிர்ஷ்டவசமாக, பாலம் இடிந்து விழும் தருணத்தில் பெரிய அளவிலான வாகனப் போக்குவரத்து அந்தப் பகுதியில் இல்லாததால், பாரிய உயிர்ச்சேதங்கள் மற்றும் காயங்கள் எதுவும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும், அனர்த்த முகாமைத்துவ பிரிவினரும் அப்பகுதியைச் சுற்றி வளைத்து, பொதுமக்கள் பாலத்திற்கு அருகில் செல்வதைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அத்துடன், இப்பகுதியூடான அனைத்து போக்குவரத்துகளும் தற்போது முழுமையாக முடக்கப்பட்டு, மாற்றுப் வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாலத்தின் தற்போதைய நிலை மற்றும் அதன் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்வதற்காக பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
பாலத்தின் தூண்கள் பலவீனமடைந்ததா அல்லது அண்மைக்கால காலநிலைத் தாக்கத்தினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பல ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்த இப்பாலத்தின் பராமரிப்புப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் பொதுமக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.